நிரந்தர தீர்வை வேகமாக வழங்குவது கடினம்! ஜனாதிபதி ..

523


நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு சில இனவாத குழுக்கள், குறுகிய கால தீர்வுகள் மூலமான வேகமான பயணத்தை எதிர்பார்த்தாலும், நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பதை வேகமாக செய்ய முடியாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.



ஐக்கிய நாடுகள் சபையின் 72 பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான யோசனைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



கடந்த இரண்டரை வருட காலப் பகுதியில் நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், ஜனநாயகத்தை உறுதிசெய்யவும் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்பன தற்போது எழுச்சி பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


அத்துடன், 2015ம் ஆண்டு ஜனாதிபதியாக தான் பதவியேற்கு முன்னர் வரை, உலகில் எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு தலைவருக்கும் இல்லாத வரம்பற்ற அதிகாரங்கள் இலங்கை ஜனாதிபதிக்கு காணப்பட்டதாகவும் மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மக்களை உலகின் மகிழ்ச்சிகரமானவர்களாகவும், ஒரே நாட்டில் வாழ்பவர்களாகவும் ஆக்குவதே தனது இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை நேரப்பட்டி இன்று அதிகாலை 04.30 அளவில் அவரது உரை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.