கெட்டவார்த்தையில் திட்டியதால் கொலைசெய்த நபர்கள்!!

747

அரியலூர் மாவட்டத்தில் லொறி ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் காவல் நிலையத்தில், எதற்காக இந்த கொலையை செய்துள்ளோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கிளாட்வின் என்ற லொறி உரிமையாளர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தியதில் தலைமறைவாக இருந்த லொறி ஓட்டுநர்களான சிவகுமார் மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், லொறி உரிமையாளர் கிளாட்வின் திருட்டு மணல் எடுத்து விற்பனை செய்துவந்தார். எங்கள் இருவரால் அவருக்கு அதிக வருமானம் கிடைத்தது. நாங்கள் கடுமையாக உழைத்ததால் அவர் அதிக பணம் சம்பாதித்தார்.

நாங்கள் இருவரும் இரவு பகலாக உழைக்கிறோமே, எங்களுக்குச் சம்பளத்தை உயர்த்தித் தரக் கூடாதா என்று கேட்டோம். அதற்கு அவர், நீங்க பார்க்கிற வேலைக்கு உங்களுக்கு சம்பளத்தை ஏத்தி தரனுமானு கெட்டவார்த்தையில் திட்டினார்.

அந்த வார்த்தை எங்களைக் கோபப்படுத்தியது. கிளாட்வினுக்கு யாரும் கிடையாது, இதனால் அவரை கொலை செய்துவிட்டு, லொறியை நாங்கள் கைப்பற்றிவிடலாம் என முடிவு செய்தோம்.

நாங்கள் திட்டமிட்டபடியே கிளாட்வின்னை அழைத்துச் சென்றோம். ஜெயங்கொண்டத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தாண்டியதும் கிளாட்வினை கொன்றுவிட்டு முந்திரித் தோப்பில் புதைக்க லொறியை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது லொறி பழுதாகி திருக்களப்பூர் என்ற இடத்தில் நின்றுவிட்டது.

எவ்வளவோ முயற்சி செய்தும் லாரியை எடுக்க முடியவில்லை. பொழுது விடிந்தால் நாங்கள் மாட்டிகொள்வோம் என்று பயந்துகொண்டு உடலை தார்பாயிலில் சுற்றி வைத்துவிட்டு ஓடிவிட்டோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.