கமரா, ரிமோட், மைக்ரோஃபோன் வசதியுடன் அமேசான் பூட்டு அறிமுகம்!!

382

சிறப்புத்திறன் கொண்ட பாதுகாப்பு கெமரா மற்றும் ரிமோட் மூலம் இயங்கும் பூட்டை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தனது முதன்மை வாடிக்கையாளர்கள் வீட்டில் இல்லாதபோது அமேசான் பொருட்களை விநியோகம் (Delivery) செய்யும் வகையில், முதலில் இது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அமெரிக்காவின் 38 நகரங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

வீட்டில் ஆள் இல்லாத போதும் வீட்டாரின் அனுமதியோடு, வீட்டுக்கு வரும் பொருட்களை உள்ளே வைக்க ரிமோட் மூலம் கதவைத் திறக்கும் வகையில் இந்த கெமரா மற்றும் பூட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ வொய்ஸ் அசிஸ்டென்ட் அலெக்ஸா’ உதவியுடன் இந்த கெமரா செயற்படும்.

அமேசான் பூட்டு மற்றும் கெமரா இணைந்து ”Amazon Cloud Cam” என்று அழைக்கப்படுகிறது. Order செய்த பொருள் வீட்டிற்கு வந்ததும், வீட்டு உரிமையாளரின் கைபேசிக்கு தகவல் செல்லும்.

அந்த தகவலைக் கொண்டு, கைபேசி மூலம் கதவைத் திறக்கவும், அவர்கள் சென்றதும் மூடவும் முடியும். அத்தோடு, இவை அனைத்தையும் கைபேசி ஊடாக நேரடியாக வாடிக்கையாளர் கண்காணிக்க முடியும்.

இந்த தொழில்நுட்பத்தில் 3 கெமராக்கள் வழங்கப்படுகின்றன. இதில் உயர் தரத்துடன் காட்சிகளைப் பதிவு செய்யும் வசதி உள்ளது. நைட் விஷன் வசதியும், கதவுக்கு இரண்டு பக்கத்திலும் ஆடியோ வசதியும் இருக்கும்.

இந்த பூட்டை வீட்டில் பொருத்தியிருக்கும் பயனாளர், எங்கிருந்து வேண்டுமானாலும் தனது செல்போனில் இருக்கும் Amazon Cloud Cam App மூலமாக தனது வீட்டினை நேரடியாகப் பார்க்கலாம்.

வீட்டிற்கு உறவினர்கள் வந்தாலோ, பொருட்கள் டெலிவரிக்கு வந்தாலோ ரிமோட் உதவியுடன் வீட்டின் கதவைத் திறக்கலாம்.

அதுமட்டுமல்ல, கெமராவுடன் இணைக்கப்பட்டுள்ள மைக்ரோஃபோன் மூலம், வீட்டில் இருக்கும் குழந்தைகள், உறவினர்கள் அல்லது வளர்ப்புப் பிராணிகளிடம் கூட பேச முடியும்.