அமெரிக்காவில் இந்திய வம்சாவளி ஹொட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை!!

525

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹொட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் தயாதி (40) என்பவர் ஹொட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவரது ஹொட்டலில் மார்கிஸ் டெவிட் (23) என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை அங்கு பணியில் இருந்த காவலாளி வெளியில் அனுப்பியுள்ளார். இந்தநிலையில் துப்பாக்கியுடன் ஹொட்டலுக்குள் நுழைந்த அந்த நபர் ஆகாஷ் தயாதியை நோக்கி சுட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அங்கிருந்த நான்கு பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காவலாளியும் தனது துப்பாக்கியை பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் டெவிட் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் டெவிட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை அமெரிக்காவில் நடைபெற்றுள்ள 307 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 530 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.