ஏ9 வீதியில் நீண்டநேரம் காத்திருக்கும் மாணவர்கள்!!

312

கிளிநொச்சி ஏ9 வீதியின் உமையாள்புரம், இயக்கச்சி போன்ற பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்வதினால் மாணவர்கள் நீண்டநேரம் வீதியில் காத்திருந்து பாடசாலைகளுக்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாடசாலைகளுக்குச் செல்லாமல் வீட்டிற்குச்செல்வதும் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவைகள் இன்மை, பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லாது விடுவதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக A9 வீதியிலும், ஏ35 வீதியிலும் பயணிக்கின்ற பேருந்துகள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டி ஓடுகின்றன. இதனால், பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச்செல்வதில்லை என்றும், இதனால் பிற வாகனங்களை வழிமறித்து அவற்றிலேயே பாடசாலை மாணவர்கள் பயணிக்கின்ற நிலைமை காணப்படுவதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஏ9 வீதியின் உயைமாள்புரம், இயக்கச்சி, கரந்தாய் ஆகிய பகுதிகளிலிருந்து பரந்தன் இந்து மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்குச்செல்ல வேண்டிய 25இற்கும் மேற்பட்ட மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச்செல்லாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் நீண்ட நேரம் வீதியில் காத்திருந்து 8.00 மணிக்குப்பின்னரும் பாடசாலைக்குச் சென்றதும் வீடுகளுக்குச்சென்றதையும் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.