அரியாலை சம்பவம் – சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை!!

374

யாழ்ப்பாண அரியாலை மணியம் தோட்ட பிரதேசத்தில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர்கள் நேற்று (16) அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சந்தேக நபர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளை கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில், விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவினர் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் அடையாள அணிவகுப்பிற்கும் யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் உத்தர பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த கட்டளையின் படி நேற்று (16) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டதுடன் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி பி.மோகனதாஸ் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது விஷேட அதிரடிப்படையினர் இருவர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். எனினும், அடையாள அணிவகுப்பில் இரு விஷேட அதிரடிப் படையினரையும் சாட்சியான நிஷாந்தன் அடையாளம் காட்டவில்லை.

இதேவேளை சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அவர்கள் சார்பில் பிணை விண்ணப்பம் செய்திருந்த போதும் அந்த பிணை விண்ணப்பமானது மன்றினால் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த இரு விஷேட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் அதுவரை வழக்கினை ஒத்திவைக்கவும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ;தரன் உத்தரவிட்டார்