தமிழ் நடிகர்களின் போர்க் குணம் : மண்டியிடும் வட இந்திய நடிகர்கள்!!

583

எந்தக் கட்டுரையும் விளக்க முடியாத அளவிற்கு வட இந்தியா மற்றும் தென் இந்தியாவிற்கு இடையிலான கலாசார வேறுபாட்டை சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் நமக்கு திறம்பட வரையறுத்துக் காட்டியுள்ளன.

பத்மாவதி என்ற இந்தி படத்தை ராஜ்புத் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் எதிர்க்க, அவர்களை சமாதானப்படுத்தும் விதமாகப் பேசி அந்தப் படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

ஆனால், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “அதிகாரப் பசியால்” ஆளும் பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்புகளை அடக்குவதாக குற்றஞ்சாட்டினார்.

இன்னும் வெளிவராத பத்மாவதி திரைப்படம் குறித்து எந்த உறுதியான ஆதாரமும் இல்லாத நிலையில், வன்முறை போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அவர்களை சமாதானப்படுத்த பன்சாலி மற்றும் அவரது குழுவினர் எடுத்த நடவடிக்கைக்கு முற்றிலும் மாறுபட்டது தென் இந்திய திரைத்துறையினர் பா.ஜ.க மீது வெளிப்படுத்தும் செயல்கள்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானிய நடிகர்கள் சிலர் நடித்து வெளிவந்த ´ஏ தில் ஹை முஷ்கில்´ படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹாராஷ்டிர நவ்நிர்மான் சேனா அமைப்பு போராட்டங்கள் நடத்த, அதற்கு பதிலளித்த இயக்குனர் கரன் ஜோஹரின் காணொளியைப் போல அவ்வளவு பரிதாபமாக இல்லை பன்சாலியின் பதில்.

இந்நிலையில், இந்து தீவிரவாதத்தின் வன்முறை வலுத்து வருவதை எதிர்த்து பத்திரிக்கை ஒன்றில் எழுதியிருந்தார் தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகரான கமல்ஹாசன்.

மேலும், பா.ஜ.கவின் திட்டமான ஜி.எஸ்.டி வரி குறித்து ´மெர்சல்´ படத்தில் கேலி செய்யப்பட்டதாக கூறி அந்தப் படத்தின் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க கேட்ட போது, பல தமிழ் நட்சத்திரங்கள் நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்ததில் கமலும் ஒருவர்.

மெர்சல் படத்தை எதிர்த்த வலதுசாரிகள், விஜயின் கிறிஸ்துவ அடையாளத்தை விமர்சித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, மெர்சல் படத்தை வெற்றிப் பெற செய்த அனைவருக்கும் நன்றி என கடிதம் எழுதி, அதில் சி. ஜோசஃப் விஜய் என்று தனது முழுப் பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய நடிகர்கள் பலர், அவர்களது செயல் மற்றும் கூற்றுகளுக்காக அரசியல் அமைப்புகளாலும் மத அடிப்படைவாதிகளாலும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

பா.ஜ.க ஆட்சி அமைத்த கடந்த மூன்று ஆண்டுகளில் கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டதாக இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சில விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஷாருக் கான் மற்றும் அமிர் கான் ஆகியோர் சகிப்புத்தன்மை குறித்து பேசியதற்காக மத்திய அரசால் வெளிப்படையாகவே பாதிக்கப்பட்டனர். இது போன்று பல இந்தி பிரபலங்கள் பா.ஜ.கவின் செயல்களுக்கு அமைதியாக மண்டியிடும் அதே வேளையில், தென் இந்திய நடிகர்களுக்கும் பா.ஜ.கவுக்கும் நடைபெறும் மோதல்கள் வட இந்திய நடிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

தென் இந்திய நடிகர்களுக்கு அரசியலில் நுழைய ஆசை இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

இந்த ஊகத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்தது, தீவிர அரசியலுக்குத் தான் வர உள்ளதாக கமல் வெளியிட்ட அறிவிப்பு. தென் இந்தியாவில் சினிமா நட்சத்திரங்களாக இருந்த பலரும் அரசியலில் உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர். ஆந்திராவை சேர்ந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராம ராவ், தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ராமசந்திரன் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் இதுவரை எந்த இந்தி திரைப்பட நடிகரும் அரசியலில் நுழைந்ததில்லை.

முதலில், தென்னிந்திய மற்றும் வட இந்திய நடிகர்களின் மனப்பான்மையும் அணுகுமுறையும் முற்றிலும் மாறுபட்டதாகும். தீவிர கலை பயிற்சியாளர்களின் சமூக அரசியல் சார்ந்த கருத்துகளை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளும் வட இந்தியா, வணிகப் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களின் பேச்சை பெரிதாக மதிப்பதில்லை.

கடந்த 2012ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அசாம் மாநிலம் குறித்து விவாதிக்கும்போது நடிகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயா பச்சன் தலையிட, அதற்கு பதிலளித்த அப்போதைய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, “இது பட விவகாரம் அல்ல, முக்கியமான விஷயம்”என்று பச்சனிடம் கூறியது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியா சுதந்திரம் அடைந்த நாட்களிலிருந்து, வட இந்திய கலாசாரத்தை தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் திணிக்க முயற்சிக்கும் போதெல்லாம் அதனை கடுமையாக எதிர்க்கும் பாரம்பரியத்தை கொண்டது தமிழ்நாடு.

மேலும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல் இந்தி திணிப்பு முயற்சி எடுத்தது வடக்கின் கலாசார திணிப்புக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

அதற்காக தென் இந்திய நடிகர்கள் யாரும் அரசியல் அழுத்தங்களுக்கு கீழ்படிந்ததில்லை என்று கூறிவிட முடியாது. ஆனால் திரையிலோ அல்லது வெளியிலோ வாய் திறக்காமல் இருப்பதை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப் படங்களில் பல்வேறு சாதிகளைப் பற்றிய கதைகளும் வெளிப்படையாக பேசப்பட்டிருக்கும். ஆனால் பாலிவுட் படங்களில் இதைப் போல ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பற்றிய கதைகளைக் கொண்ட படங்கள் இல்லை.

வட இந்தியாவைப் போல தென் இந்தியாவிலும் மதம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றன. இப்படியான வகுப்புவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளும், கேரளாவில் கம்யூனிஸ்டுகளும் மற்ற சில இயக்கங்களும் தொடர்ந்து வலுவாகக் குரல் கொடுத்து வருகின்றன.

மெர்சல் படத்தில் வந்த ஜி.எஸ்.டி குறித்த காட்சிகளை விமர்சிக்க, நடிகர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்ற நிலைப்பாட்டை எடுத்த பா.ஜ.கவின் செயல் அறிவற்ற செயல் என்று கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், கமல்ஹாசன் மற்றும் விஜய்யின் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டன. பெரும்பாலும் அதிகாரத்திற்கு கீழ்படிந்து போகும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு, தென் இந்திய நடிகர்களின் இந்த நடவடிக்கைகள் சற்று விசித்திரமாகவே உள்ளன.