மாவீரர் தினத்தை அரசியலாக்க வேண்டாம் : ப.சத்தியலிங்கம் கோரிக்கை!!

238

இனவிடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தினத்தை அரசியலாக்க வேண்டாமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று வவுனியாவில் அமைந்துள்ள தமிழரக்கட்சியின் அலுவலகமான தாயகத்தில் நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போது தேர்தல் காலம் சூடுபிடித்துள்ளது. இம்மாதம் நினைவுகூறப்படவுள்ள மாவீரர் தினத்தை தமது அரசியல் பிரச்சாரத்திற்காக சிலர் அரசியலாக்க முனையலாம். மாவீரர் தினமென்பது கொண்டாட்டமல்ல. கனத்த மனதுடன் உணர்வுபூர்வமாக நினைவுகூறப்படும் நாள். இதனை அரசியலாக்கி கொச்சைப்படுத்துவது ஆரோக்கியமான விடயமல்ல.

மாவீரர் துயிலுமில்லங்கள் பல இன்றும் இராணுவ முகாம்களாக உள்ளன. தங்கள் பிள்ளைகளை விதைத்த அந்த மண்ணில் பெற்றோர்கள், உறவினர்கள் துயரங்களை சொல்லி அழுவதற்கே உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

தங்கள் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களும் அவர்களின் உறவினர்களும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கும் புனிதமான நாள். இதை அரசியலாக்குவது அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாதென்று தெரிவித்தார்.