வடகொரிய ஏவுகணை அச்சுறுத்தல் எதிரொலி : ஹவாயில் அபாய சங்கு ஒலித்து சோதனை!!

431

வடகொரியா 6வது முறையாக கடந்த செப்டம்பர் மாதம் 3ம் திகதி அணுகுண்டு வெடித்து சோதித்தது. தொடர்ந்து அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில், குறிப்பாக எந்த ஒரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த ‘கவாசாங்-15’ ஏவுகணையை கடந்த 29ம் திகதி ஏவி சோதித்தது. இது உலகளாவிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவில் நேற்று முன்தினம் காலை அணு ஆயுத தாக்குதல் அபாய சங்கு ஒலித்து சோதனை செய்யப்பட்டது.

ஹவாய் தீவில், மாதம் தோறும் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு அபாய சங்கு ஒலித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வடகொரியாவின் எச்சரிக்கையையொட்டி, இப்போது ஹவாயில் முதல்முறையாக அணு ஆயுத தாக்குதல் அபாய சங்கு ஒலித்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.

1980களில் பனிப்போரின்போதுதான் அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை அபாய சங்கு அங்கு ஒலித்துள்ளது.

இந்த அபாய சங்கின் ஒலி மாறுபட்டதாக அமைந்திருப்பதோடு, அடுத்த கட்ட அறிவிப்பு வருகிற வரையில் பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு உணர்த்துகிறது.

இதுபற்றி ஹவாய் நெருக்கடி கால மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் வெர்ன் மியாகி கூறுகையில், “இந்த அபாய சங்கு ஒலியின் மாறுபாட்டை மக்கள் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம் ஆகும்” என்று குறிப்பிட்டார்.

வடகொரியா ஏவுகணையை ஏவினால், அந்த ஏவுகணை 20 நிமிடங்களில் தாக்க முடியும் என தகவல்கள் கூறுகின்றன.

ஹவாய் தீவில்தான் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்க ராணுவ தலைமையகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.