வவுனியாவில் தனியார் மருத்துவமனையின் அசமந்தப்போக்கு : முதியவர் உயிரிழப்பு!!

546

வவுனியா குருமன்காடு பகுதியிலுள்ள தனியார் கிளினிக் நிலையத்திற்கு சுகயீனம் காரணமாக சென்ற முதியவர் ஒருவர் கிளினிக் நிலையத்தில் போடப்பட்ட ஊசி ஒவ்வாமை காரணமாக மரணமடைந்துள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கடந்த 30.11.2017 அன்று காலை 7.30 மணியளவில் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏரம்பு சிவலிங்கம் என்ற 64 வயது முதியவர் சுகயீனம் காரணமாக குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் கிளினிக் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவரை குறித்த கிளினிக்கின் வைத்தியர் பரிசோதித்து ஊசி ஒன்றைப் போட்டுள்ளார். குறித்த ஊசி ஒவ்வாமை காரணமாக முதியவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக குறித்த வைத்தியர் முச்சக்கரவண்டியொன்றின் மூலம் குறித்த நபரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எனது தந்தைக்கு இதுவரை எந்தவொரு நோய்களும் ஏற்பட்டதில்லை. இதுவே முதற் தடவையாக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். தனியார் கிளினிக் நிலையத்தில் வழங்கப்பட்ட ஊசியே எனது தந்தை உயிரிழப்பதற்கு காரணமாகும்.

அவர்கள் ஊசி ஏற்றிய உடன் எனது தந்தை இறந்துவிட்டார். இவர்கள் தாங்கள் தப்பிப்பதற்காக எனது தந்தை இறக்கவில்லை எனத் தெரிவித்து நாடகமாடி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

எனது தந்தையின் மரணத்திற்கு முழுப்பொறுப்பையும் குறித்த தனியார் மருத்துவமனையே ஏற்க வேண்டும். இது போன்ற சம்பவம் இனிமேல் யாருக்கும் இடம்பெறக்கூடாது என்று இறந்த வயோதிபரின் மகன் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பாக குறித்த தனியார் மருத்துவனையின் வைத்தியரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கேட்டபோது,

குறித்த நோயாளிக்கு நான் தான் வைத்தியம் பார்த்ததாகவும், அவருக்கு ஏற்றிய ஊசி ஓவ்வாமை காரணமாக அவர் மயக்கமடைந்ததாகவும், உடனடியாக அவரை முச்சக்கரவண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து காப்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

உயிரிழந்த முதியவரின் உடற்பாகங்கள் உடற் கூற்றுப்பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடயம் தொடர்பாக உயிரிழந்த முதியவரின் உறவினர்களினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.