3வது டெஸ்ட் போட்டி சமநிலையில் : உலக சாதனையை சமன் செய்த இந்திய அணி!!

298

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை இலங்கை அணி சமநிலை செய்துள்ளது. இதன்மூலமாக இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டியில் டெல்லியில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 536 ஒட்டங்கள் குவித்து போட்டியை இடைநிறுத்திக்கொண்டது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அணித்தலைவர் கோஹ்லி 243 ஒட்டங்களும், முரளி விஜய் 155 ஒட்டங்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் சந்தகன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 373 ஒட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 164 ஒட்டங்களும், மத்யூஸ் 111 ஒட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் அஸ்வின், இஷாந்த சர்மா தலா 3 விக்கெட் கைப்பற்றினர். 163 ஒட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 246 ஒட்டங்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

தவான் 67 ஒட்டங்களும், கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா தலா 50 ஒட்டங்களும் எடுத்தனர். இதன்மூலமாக இலங்கை அணிக்கு 410 ஒட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், இலக்கை துரத்த களமிறங்கிய இலங்கை, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ஒட்டங்கள் எடுத்திருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டத்தினை தொடங்கிய இலங்கை அணியில் மத்யூஸ் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை 4 விக்கட்டுகளை இழந்து 35 ஒட்டங்கள் எடுத்திருந்தது.

பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் தினேஷ் சந்திமல் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். தனஞ்ஜெய டி சில்வா – சண்டிமல் கூட்டணி 112 ஒட்டங்கள் சேர்த்தது.

இந்நிலையில் சந்திமால் 36 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரோஷன் சில்வா களம் இறங்கினார். 119 ஒட்டங்கள் எடுத்திருந்த தனஞ்ஜெய, Retire Hurt முறையில் வெளியேறினார்.அவருக்கு பதிலாக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல நிலைத்து நின்று ஆடினார். ரோஷன் மற்றும் டிக்வெல இணை 94 ஒட்டங்கள் சேர்த்ததுடன், ஆட்டமிழக்காமல் இருந்ததால் கடைசி டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிந்தது.

இலங்கை அணி 103 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ஒட்டங்கள் எடுத்தது. ரோஷன் டி சில்வா 74 ஒட்டங்களுடனும், டிக்வெல 44 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கட்டுகளையும், ஷமி, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன்மூலம், விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களை வென்றிருந்தது. தற்போது 9வது தொடரையும் வென்றுள்ளது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்
வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளின் உலக சாதனை சமன் செய்துள்ளது இந்திய அணி.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் முறையே தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளன.