பலர் தூக்கத்தை தொலைக்க நேரிடும் : பகிரங்க எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!

311


அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்தால் பலர் தூக்கத்தை தொலைக்க வேண்டியிருக்கும் என வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.



வடகொரியாவின் நடவடிக்கைகள் மூன்றாவது உலக யுத்தத்தை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து வந்தாலும், அணு ஆயுத திட்டங்களால் உலகின் சக்தி வாய்ந்த நாடாக உருவாகும் வரை தங்களின் நடவடிக்கைகள் தொடரும் என வடகொரியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய தலைவருக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தை போர் நீடித்து வருகிறது.



மட்டுமின்றி வடகொரியாவின் கொட்டத்தை அடக்க, தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அமெரிக்கா போர் ஒத்திகையிலும் ஈடுபட்டு வருகிறது.



இதற்கு தக்க பதிலடி தரும் வகையில், தங்கள் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமெரிக்காவின் போக்கு கண்டிக்கத்தக்கது என கடிந்துள்ள வடகொரியா, இதுபோன்ற நடவடிக்கைகள் பலரது தூக்கத்தை தொலைக்க காரணமாகும் என மறைமுகமாக போர் மூளும் அபாயம் குறித்து அமெரிக்காவை எச்சரித்துள்ளது.


இதனிடையே வடகொரியாவுக்கு எதிரான நிலை மேற்கொள்ள ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஆனால் ஏற்கெனவே வடகொரியா மீது அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் ரஷ்யா, அமெரிக்காவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு வடகொரியாவை எதிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.