இலங்கை இந்திய ரசிகர் நட்பு : நெகிழ்ச்சியான சம்பவம்!!

383

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் விளையாடும் பொழுது பார்வையாளர் அரங்கில் சில ரசிகர்களை தனித்துவமாக இனங்காண முடியும்.

அவர்கள் தங்களது வித்தியாசமான நடையுடை பாவனைகளால் விளையாட்டின் சூழலை வேறொரு பரிமாணத்திற்குக் கொண்டு செல்வார்கள்.

அந்தவகையில் இந்தியாவின் சுதீர் சௌத்ரி, பாகிஸ்தானின் அப்துல் ஜலில், இலங்கையின் பேர்ஸி அபேசேகர போன்றவர்களை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும்.

இவர்கள் உள்நாட்டில் மாத்திரமில்லாமல் வெளிநாட்டில் நடைபெறுகின்ற போட்டிகளில் கூட தமது சொந்தப்பணத்திலும் கிரிக்கெட் சபைகள் மற்றும் விளையாடும் வீரர்களின் தயவிலும் ஒவ்வொரு போட்டியையும் கண்டு களித்து வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருவார்கள்.

இந்நிலையில் இந்தியாவின் சுதீர் சௌத்ரி குறித்தும் இலங்கை அணியின் இன்னொரு தீவிர ரசிகரான கஜன் சேனநாயக்க குறித்தும் செய்தி ஒன்று கடந்தவாரம் வெளியாகியுள்ளது.

தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்காக இலங்கையில் இருந்து வருகை தந்த கஜன் சேனநாயக்கவின் விமானப்பயணச் செலவு, விசா கட்டணம், தங்குமிடச் செலவு, பிரயாணச் செலவு ஆகியவற்றை சுதீர் சௌத்ரி ஏற்றுள்ளார் என்பது தான் அது.

இது குறித்து சுதீர் சௌத்ரி கூறுகையில் ‘ நான் 2012 ஆம் ஆண்டு இருதடவைகளும், 2015 ஆம் ஆண்டு ஒருதடவையும், இந்தவருடம் ஒருதடவையும் இந்தியாவின் போட்டிகளை இலங்கையில் பார்வையிடச் சென்ற போது என்னுடைய செலவுகள் அனைத்தையும் கஜன் சேனநாயக்கவே ஏற்றுள்ளார்.

ஆதலால் அவர் இம்முறை இந்தியாவுக்குப் போட்டியைப் பார்வையிட வரும்பொழுது அவரது செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள நான் விரும்பினேன் என்று கூறியுள்ளார்.

இவ்விருவரும் எதிரெதிர் அணிகளைச் சேர்ந்த ரசிகர்களாக இருந்தாலும் விளையாட்டையும் மதித்து நட்பையும் பேணிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் பல ரசிகர்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகின்றார்கள்.