30,500 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு அனுமதி!!

217


இந்த வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு 30,500 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



இந்நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான ஆவணங்கள் அடுத்த வாரம் பல்கலைக்கழங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 1 இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் தகுதி பெற்றிருந்தனர்.



இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் 30,500 பேருக்கு பல்கலைக்கழக அனுமதிகள் வழங்கப்படவுள்ளன.



இவ்வருடம், சப்ரகமுவ மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் புதிதாக மருத்துவ பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இந்த இரண்டு மருத்துவ பீடங்களுக்கும், சுமார் 150 மாணவர்கள் வரையில் அனுமதிக்கப்படவுள்ளனர்.


ருகுணு பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கு மேலதிகமாக 10 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதன் அடிப்படையில், மருத்துவபீடங்களுக்கு 160 மாணவர்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளப்படுவர். மொத்தமாக மருத்துவபீடங்களுக்கு இவ்வருடம் 1,476 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்தில் புதிதாக, பொறியியல் பீடமும், நிதியியல் கற்கைகள் பீடம் என இரண்டு அலகுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இந்த பீடங்களுக்கு சுமார் 50 மாணவர்கள் வரை அனுமதிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.