உயிருக்கு போராடிய கூலித்தொழிலாளி : வேடிக்கை பார்த்த மக்களை நெகிழ்ச்சியடைய வைத்த நபர்!!

742

தமிழகத்தில் உயிருக்கு போராடிய விவசாய கூலித் தொழிலாளியை உரிய நேரத்தில் காப்பாற்றிய செந்தில் குமார் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பூபதியம்மாள் என்ற விவசாய கூலித் தொழிலாளி, உடையார்கோவிலில் உள்ள தஞ்சை பிரதான சாலையில் பேருந்தில் அடிபட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

பேருந்தின் டயர்கள் அவர் கால் மீது ஏறியதால் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற அனைவரும் பரிதாபப்பட்டனர், மேலும் சிலர் 108க்கு அழைத்து விட்டு காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அந்த வழியாக காரில் வந்த தஞ்சை அம்மாப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உடனடியாக இறங்கி வலியால் துடித்துக் கொண்டிருந்த பூபதியம்மாளை தனது காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.

அந்த வழியே கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணித்த பலரும் பரிதாபமாக பார்த்து தான் சென்றார்களே தவிர, உடனடியாக விபத்தில் சிக்கியவரை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை.

ஆனால் தன்னுடைய புதிய கார் இரத்த வெள்ளம், சென்டிமென்ட் என்று பார்க்காமல் செந்தில் குமார் தனது காரில் ஏற்றிச் சென்றது, பூபதியம்மாளின் கணவர், மகன் மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவருமே நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

இதுகுறித்து செந்தில் குமார் கூறுகையில், வலியால் துடித்துக்கொண்டு இருந்தவர்களுக்கு நான் உதவி செய்தேன் அவ்வளவு தான், இது ஒரு சாதாரண உதவி என்று கூறியுள்ளார். இருந்த போதிலும் அவரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.