வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக 8 பேரூந்து சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிப்பு!!

406


 
வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பேரூந்துகளை தரித்து பயணிகளை ஏற்றிய 8 சாரதிகளுக்கு வவுனியா போக்குவரத்து பொலிஸார் தண்டப்பணம் விதித்துள்ளனர்.

வெளிமாவட்டத்திலிருந்து வவுனியாவில் நிறைவடையும் பேரூந்து சேவைகள் மாத்திரமே வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் செல்ல முடியுமெனவும், வெளிமாவட்டத்திலிருந்து வேறோரு மாவட்டத்திற்கு செல்லும் பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக தரித்து பயணிகளை ஏற்றிச்செல்ல முடியுமெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார், இ.போ.ச பேரூந்துகள் கடந்த வாரம் முதல் சேவையினை முன்னெடுத்து வருகின்றன.



இந் நிலையில் இன்று (11.01.2018) காலை தொடக்கம் மதியம் வரை புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பேரூந்துகளை தரித்து பயணிகளை ஏற்றிய 8 சாரதிகளுக்கு வவுனியா போக்குவரத்து பொலிஸார் தண்டப்பணம் விதித்துள்ளனர்.

புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பாதசாரிகள் கடவையில்லை, வாகனம் தரிப்பதற்கு தடையென எவ்வித பாதாதைகளும் காணப்படவில்லை மற்றும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து அடுத்த பயணிகள் தரிப்பிடம் சுமார் 500மீற்றர் தூரத்தில் வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ளது. மற்றும் வீதியின் அருகே ( வெள்ளைக் கோட்டிற்கு கீழே) பேரூந்தினை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது தவறா? அவ்வாறாயின் புதிய பேரூந்து நிலையத்தினுள் தரித்து பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதியினை பெற்றுத்தருமாறு வெளிமாவட்டத்தினை சேர்ந்த பேரூந்து சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



புதிய பேரூந்து நிலையத்தினுள் வெளிமாவட்டத்தினை சேர்ந்த பேரூந்துகள் தரித்து பயணிகளை ஏற்றாமல் நேராக செல்வதினால் நாங்கள் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நின்று பேரூந்துகளின் பயணம் மேற்கொள்ளுகின்றோம். ஆனால் அதனையும் போக்குவரத்து பொலிஸார் தடுத்து அவ்விடத்தில் தரிக்கும் பேரூந்து சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கின்றார்கள். எனவே நாங்கள் எங்கு நின்று எமது சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.



இவ் விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்த சமயத்தில் இவ் விடயம் தொடர்பாக தான் தீர்க்கமான முடிவினை தெரிவிப்பதாக தெரிவித்தார்.