வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாண T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பொலிஸ் அணி சம்பியன்!!

565

 
ஆகாஷ் குழு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வட மாகாண T20 கிரிக்கெட் போட்டியில் வவுனியா பொலிஸ் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

வட மாகாண கிரிக்கெட் விளையாட்டின் ஒரு வளர்ச்சிப் படியாக ஆகாஷ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வடமாகாண T20 கிரிக்கெட் போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த 31 ஆம் திகதி முதல் நடைபெற்ற இந்தப் போட்டியில் முப்பத்து மூன்று அணிகள் பங்கேற்றன. இந்த T20 போட்டியின் இறுதியில் ஆகாஷ் சம்பியன் கிண்ணத்தை வென்ற சம்பியன் அணி, ரன்னர்அப் மற்றும் சிறந்த பந்துவீச்சு, சிறந்த துடுப்பாட்டம், தொடரின் வெற்றி வீரர், ஆட்ட நாயகன் அனைவருக்கும் பெறுமதியான பணப் பரிசில்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

சனிக்கிழமை நடைபெற்ற அரைஇறுதி சுற்றில் வவுனியா பொலிஸ் அணியும், செட்டிகுளம் காரைநகர் விளையாட்டு அணியும் மோதின. அதே தினத்தில் புனித ஜோசப் விளையாட்டு அணி மற்றும் வவுனியா யுனிபைட் விளையாட்டுக் கழக அணியும் மோதியது. இந்தப் போட்டிகளில் வவுனியா பொலிஸ் அணியும், வவுனியா யுனிபைட் விளையாட்டுக் கழக அணியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை மோதின.

இறுதிப் போட்டியின் போது 10 ஓவர்களைக் கொண்ட ஆகாஷ் நிறுவன ஊழியர்களுக்கும் மற்றும் ஆதிவாசிகளுக்கு இடையிலான மென்பந்துப் போட்டி ஒன்றும் நடைபெற்றது. அத்துடன் பாராம்பரிய கலாசாரங்களை வெளிப்படுத்தும் நடன நிகழ்வுகளும், ஆதிவாசிகளின் விசேட பூஜைகளும் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் வவுனியா பொலிஸ் அணி வெற்றி பெற்று 2 இலட்சம் ரூபாய் பணப் பரிசிலைப் பெற்றதுடன் யுனிபைட் அணி இரண்டாம் இடத்தைப் பெற்று ஒரு இலட்சம் ரூபாய் பணப் பரிசிலையும் பெற்றுக் கொண்டது.

இதில் ஆகாஷ் குழு நிறுவனமான தலைமை அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி எஸ்.ராமசுப்ரமணியன், குறஜித்த நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளை அதிகாரிகள், வவுனியா மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.