பிரட்மனின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!!

355

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி தலைவர் விராட் கோலியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அவர் தனது 21வது சதத்தை பதிவு செய்தார்.

விராட் கோலி 217 பந்துகளில் 15 நான்கு ஓட்டங்களுடன் 153 ஓட்டங்கள் குவித்தார். அணி தலைவர் பதவியிலிருந்து அவர் 8வது முறையாக 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

இதன் மூலம் கிரிக்கெட் சகாப்தமான டொன் பிரட்மனின் சாதனையை கோலி தனது 65வது டெஸ்டில் சமன் செய்தார். பிரட்மன் அணித் தலைவர் பதவியிலிருந்து 8 முறையுடன் ஒட்டு மொத்தமாக 9 முறை 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

மைக்கல் கிளார்க் , மஹேல ஜயவர்த்தன, பிரைன் லாரா , ஸ்மித் ஆகியோர் தலா 7 தடவை அணி தலைவர் பதவியிலிருந்து 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

மேலும் செஞ்சூரியன் மைதானத்தில் சதம் அடித்த முதல் வெளிநாட்டு அணித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்பு இந்த மைதானத்தில் டோனி அணித் தலைவர் பதவியில் 90 ஓட்டங்கள் (2010) எடுத்ததே சிறந்த நிலையாக இருந்தது.

தென்னாபிரிக்க மண்ணில் சதம் அடித்த 2வது ஆசிய அணித் தலைவர் கோலி ஆவார். இதற்கு முன்னர் டெண்டுல்கர் 1997ம் ஆண்டு கேப்டவுன் மைதானத்தில்அணித் தலைவராக இருந்த போது 169 ஓட்டங்கள் குவித்தார். ஒட்டு மொத்தமாக அவர் தென்னாப்பிரிக்காவில் 5 சதங்கள் அடித்துள்ளார். கோலி 2 சதங்கள் அடித்துள்ளார்.