இலங்கை வந்த வெளிநாட்டவர்களின் மோசமான செயல்!!

249
இலங்கை வந்த வெளிநாட்டவர்கள் இருவர் இலங்கைப் பிரஜை ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து சுமார் 28000 ரூபா பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாரவில – கட்டுனேரி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்ற இரு வெளிநாட்டுப் பிரஜைகள், அங்கு பணியாற்றும் நபரிடம் சிலிண்டர் ஒன்றின் விலையை விசாரித்துள்ளனர்.

ஒருவர் விலை தொடர்பில் விசாரிக்க மற்றைய நபர் அப்பணியாளரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளார். இதன்போது, இந்த நாட்டில் உள்ள பெறுமதி கூடிய நாணயம் பற்றியும் விசாரித்துள்ளனர்.

மேலும் பணியாளரின் கையிலிருந்த பணத்தை பார்க்க வேண்டும் எனக் கூறிய பின்னர் அந்த ஊழியர் 28,000 ரூபா பணத்தைக் காண்பித்த நிலையில், அப்பணத்தை மிக நூதனமான முறையில் அபகரித்துள்ளனர்.

அதன்பின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த பணத்தை நிறுவன முகாமையாளரிடம் ஒப்படைக்கும் போது அதில் பணம் குறைவாக இருப்பதாக ஊழியர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சோதனையிட்டுள்ளனர். அதில் குறித்த பணியாளரிடம் அங்கு வந்த இரு வெளிநாட்டவர்களும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் காட்சிகள் பதிவாகி இருப்பதை நிறுவன பணியாளர்கள் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் மாரவில பொலிஸ் நிலையத்தில் நிறுவன முகாமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு பணத்தை மோசடி செய்த இரு வெளிநாட்டவர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் மாரவில பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.