பால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!

507

முதல் முறையாக பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரத்துடன் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், முதன் முதலாக விண்வெளி மண்டலத்திற்கு வெளியே அதாவது பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒகலாமா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜின்யூ டாய், எடுவர்டு கெர்ராஸ் ஆகியோர் பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர்.

மைக்ரோலென்சிங் நுண் தொழில்நுட்பம் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 3.8 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன. இது குறித்து ஜின்யூ டாய் கூறுகையில், “ இந்த கண்டுபிடிப்பால் நாங்கள் மிகுந்த உற்சாகமாக உள்ளோம். பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறையாகும்” என்றார்.

இதேபோல் எர்வர்டு கெர்ராஸ் கூறுகையில், “ இந்த சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, மைக்ரோலென்சிங் நுண் தொழில்நுட்பம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான சிறந்த உதாரணமாகும்.

இந்த கிரகங்களை நேரடியாக பார்க்க முடியாது. மிக சிறந்த தொலைநோக்கியால் இவற்றை பார்க்கலாம் என்பதை கூட நினைத்து பார்க்க முடியாது. நாம் அவற்றை ஆராய்ச்சி மட்டுமே செய்ய முடியும்’’ என்றார்.