இந்த காதல் கதை நிச்சயம் உங்கள் மனதை பாதிக்கும்!!

343

 
உத்தர பிரதேசத்தில் அசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது நீண்ட கால நண்பருக்கும் காதலர் தினத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜகத்பூரை சேர்ந்தவர் பிரமோதினி. கடந்த 2009ஆம் ஆண்டு, கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அவர் மீது அசிட்டை வீசி விட்டு தப்பியுள்ளார்.

இதனால் பிரமோதினிக்கு 80 சதவீத அளவில் காயங்கள் ஏற்பட்டன, மேலும், கண் பார்வையும் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் பிரமோதினி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், 2014ஆம் ஆண்டு சரோஜ் சாஹூ என்னும் இளைஞர், அசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வேதனையை அறிய முற்பட்டுள்ளார். அவரை அம்மருத்துவமனையைச் சேர்ந்த தாதி ஒருவர், பிரமோதினிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதன் பின்னர் பிரமோதினிக்கு உதவிகள் செய்ய துவங்கிய சரோஜ், நாளடைவில் தனது வேலையை விட்டுவிட்டு முழுநேரமும், பிரமோதினியை கவனிக்கத் தொடங்கினார்.

சரோஜின் உதவியால் பிரமோதினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ‘அசிட் வீச்சை நிறுத்துங்கள்’ என்ற பிரச்சாரக் குழுவினரின் ஆலோசனைப்படி, டில்லிக்கு சென்ற பிரமோதினி அங்கேயே சிகிச்சை பெற்றார்.

ஆனால் பிரமோதினியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத சரோஜ், அவரை தொலைபேசியில் அழைத்து அவரை மணந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தனது நிலையால் சரோஜை ஏற்க முதலில் தயக்கம் காட்டிய பிரமோதினி, சரோஜின் உறுதியான நிலைபாட்டினால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நீண்ட சிகிச்சைக்கு பிறகு பிரமோதினிக்கு 20 சதவித கண்பார்வை கிடைத்துள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், அசிட் வீச்சுக்கு எதிரான பிரச்சார இயக்கத்தால் நடத்தப்படும், ‘ஷிரோஸ் ஹேங் அவுட் கபே’ எனும் காபி விற்பனை நிறுவன வளாகத்தில், சரோஜ் மற்றும் பிரமோதினிக்கு திருமண நிச்சயதார்த்த விழா, காதலர் தினத்தன்று நடந்தது.

அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்க உள்ளதாக, அவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.