மாணவர்களுக்கு திருட கற்றுக் கொடுத்த ஆசிரியை!!

529

thefதனது வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டில் திருடி வரும்படி கூறி கொள்ளையடித்த ஆசிரியை ஒருவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

இந்தியாவின் ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டம், குண்டக்கல் மண்டலம் ஐயவாரிபல்லி கிராமத்திலுள்ள அரச பாடசாலையில் முதலாம் தரம் முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பாடசாலையில் ஆசிரியையாக ஷமிம்பீ பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த திப்பண்ணா, புஷ்பவதி தம்பதியின் மகள் மகாலட்சுமி 3ம் வகுப்பு படித்து வருகிறாள்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு திப்பண்ணாவின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.1,180 காணவில்லை. இந்த பணத்தை மனைவி தான் எடுத்து இருப்பதாக கூறி, அவரிடம் திப்பண்ணா தகராறு செய்தார். ஆனால் அந்த பணத்தை அவர் எடுக்கவில்லை.

இந்நிலையில் அன்று முதல் மகாலட்சுமி தினமும் பிஸ்கட், மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு வந்தாள். இதனால் சந்தேகமடைந்த திப்பண்ணாவும், புஷ்பவதியும் மகளின் புத்தகப் பையை சோதனை செய்து பார்த்தனர்.

அதில் புத்தகத்தில் சில 10 ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த பணம் எப்படி வந்தது என்று மகளிடம் கேட்டனர். அதற்கு, தந்தையின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து வருமாறு ஆசிரியை ஷமிம்பீ கூறியதாகவும், அதன்படி பணத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து ஆசிரியையிடம் கொடுத்ததாகவும், அதற்கு பதிலாக ஆசிரியை தனக்கு எட்டு 10 ரூபாய் நோட்டுகளை கொடுத்ததாகவும் சொன்னாள்.

சக மாணவ, மாணவிகளிடமும் பணத்தை எடுத்து வருமாறு ஆசிரியை கூறியதாக தெரிவித்தாள்.

இதுதொடர்பாக, நேற்று முன்தினம் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கலந்தாலோசித்தனர். பின்னர், ஒரு 500 ரூபாய் நோட்டில் சில அடையாளங்களை வைத்து, சிறுமி மகாலட்சுமியிடம் கொடுத்து ஆசிரியையிடம் தருமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

அதன்படி, மகாலட்சுமி ஆசிரியையிடம் 500 ரூபாயை கொடுத்தார். இதை மறைந்து கண்காணித்த கிராம மக்கள் ஆசிரியையிடம் சென்று, அவரது பர்ஸில் இருந்த 500ஐ எடுத்தனர்.

அந்த பணம் சாலையில் கிடைத்ததாக கூறி, தன்னிடம் மகாலட்சுமி கொடுத்ததாக ஆசிரியை கூறினார். இதுகுறித்து, கிராம மக்கள் பாடசாலை தலைமையாசிரியர் ருத்ரமநாயக்கிடம் புகார் செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மண்டல கல்வி அதிகாரி வேணுகோபால், பாடசாலைக்கு விரைந்து வந்து ஆசிரியையிடம் விசாரணை நடத்தினார். இனிமேல் இதுபோன்று நடந்து கொள்ள மாட்டேன் என்று அவரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டு சென்றார்.