வவுனியாவில் கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவல்!!

293


cowவவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கால்நடைகளுக்கு கால்வாய் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி தபோதினி தேவநேசன் தெரிவித்தார்.

கால்வாய் நோய் (Foot and mouth-FMD) தொற்று வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சின்னடம்பன் என்ற கிராமத்தில் ஏற்பட்டுள்ளது. இந் நோயானது யாழ்ப்பாண மாவட்டத்தில் சில கால்நடைகளில் ஏற்பட்டிருந்தது. அங்கிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகளில் இருந்தோ அல்லது எரு ஏற்றுவதற்கு வருகை தரும் லொறிகளிலிருந்தோ இந்நோய் இங்கு பறவியிருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.



இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படம் தொற்றும் நோயாகும். இந்நோய் கால்களில் குழம்பு உள்ள மிருகங்களான ஆடு, மாடு, பன்றி போன்றவற்றுக்கு ஏற்படும். இந்நோய் கால்நடைகளுக்கு ஏற்பட்டிருப்பின் காய்ச்சல், வாய், நாக்கு, கால்குழம்பு, மூக்கு, முகம் மற்றும் மடி ஆகியவற்றில் பெரிதளவான கொப்புளங்கள் ஏற்பட்டு அவை உடைந்து புண்களாக மாறும்.

பசியின்மை, வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல் போன்ற குணங்குறிகள் தோன்றும். இதனால் பால் உற்பத்தி குறையும். கன்றுகளுக்கு இதயம் தாக்கப்பட்டு இறப்பு ஏற்படும். சினைப்பட்ட பசுக்களுக்கு கருச்சிதைவு ஏற்படும். அத்துடன் பால் கறப்பவர்களின் கைவிரல்களில், உள்ளங்கையில் புண் ஏற்பட்டு தோல் களரும் நிலை ஏற்படும். என்றும் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.



எனவே இந்நோய்ப் பரம்பலை தடுக்கும் முகமாக எமது கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நோய்ப் பரம்பலைத் தடுக்கும் வழிகளாக நோய்க்குரிய தடுப்பு மருந்து ஏற்றுதல் மற்றும் நோய் வந்த மாடுகளை தனியாக அடைத்து வைத்து உணவூட்டல், தொற்று ஏற்பட்ட இடங்களிலிருந்து மாடுகளை கொண்டு வருதலை தடுத்தல் போன்றவை கால்நடை வளர்ப்போர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



இந்நோயை தடுப்பதற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கடந்த வியாழக்கிழமை முதல் வவுனியா மாவட்டம் முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே பண்ணை உரிமையாளர்கள் தங்கள் பிரிவு கால்நடை வைத்தியர்களுடன் தொடர்பு கொண்டு இத்தடுப்பூசியை இலவசமாக தங்களது மாடுகளுக்கு ஏற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.