வவுனியா விவசாயிகள் மானியப் பசளையை பெறுவதில் சிக்கல்!!

311

Vavuniyaவவுனியா பம்பைமடு கமநலசேவைகள் நிலையத்தில் மானிய முறையில் வழங்கப்படும் பசளையை பெருவதில் ஏற்பட்ட சிக்கலால் விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மருக்காரம்பளை கமக்காரர் அமைப்பின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்..

மகிந்த சிந்தனையில் விவசாயிகளின் மேம்பாடு கருதி மானிய முறையில் பசளைகள், பயிர்ச் செய்கை காலத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிப் பகுதியில் பம்பைமடு கமநல சேவைகள் திணைக்களத்தினால் பசளை விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

இக் காலப்பகுதியில் மழையின்றி கடும் வரட்சி ஏற்பட்டமையினால் பயிர்ச் செய்கையை விவசாயிகள் கைவிடும் நிலையில் இருந்தனர்.
எனினும் சில விவிசாயிகள் மானியப் பசளை என்ற காரணத்தினால் கமக்காரர் அமைப்புக்கு செலுத்த வேண்டிய வரிப்பணம் உட்பட மேலதிக பணங்களை செலுத்தி பசளையை பெற்றிருந்தனர்.

இந்தநிலையில் அதிகளவான விவசாயிகள் பசளையை பெறுவதில் பயன் இல்லை என்பதனால் சிரத்தை காட்டாததுடன் மழை பெய்தால் பசளையை பெறுவதெனவும் காத்திருந்தனர்.

இவ் வகையில் இம் மாத ஆரம்பத்தில் மழை பெய்து வந்தமையினால் எஞ்சியுள்ள பயிர்களை காப்பாற்றிக்கொள்ளும் பெருட்டு பசளையை பெறுவதற்காக விவசாயிகள் கமக்காரர் அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய பெருந் தொகைப் பணத்தை செலுத்திய பின்னர், கமநல சேவைகள் நிலையத்தை நாடிய நிலையில் பசளை வழங்க முடியாது எனவும் கால எல்லை முடிவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேவேளை பசளையை பெறுவதற்கான முடிவு திகதி அறிவிக்கப்படாததுடன் விநியோகம் நிறுத்தப்பட்டமையினால் பசளையை பெறாதவர்கள் நஸ்டஈட்டையும் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவித்தனர்.