தமிழகத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்களை சந்தித்த இலங்கைப் பெண்!!

247

Ind

தமிழகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் இலங்கை பெண் அகதியொருவர் 34 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உறவினர்களை சந்தித்துள்ளார்.

இச்சம்பவமொன்று நேற்று இடநிகழ்ச்சி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது குடும்பத்தினரை பிரிந்து தமிழகம் வந்து வசிக்கும் அகதிகள் பலருக்கு, இலங்கையில் உள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பு இல்லாத நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், இதுபோன்ற இலங்கை அகதிகளுக்கு இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்களுடன் உறவை ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சியை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை மேற்கொண்டது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் குமரி மாவட்டச் செயலர் டாக்டர் மோகன் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலம் இலங்கை அகதிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

இந்தநிலையில், இலங்கையில் உள்ள செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் குமரி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள அகதிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஞாறாவிளை அகதிகள் முகாமில் 34 ஆண்டுகளாக உறவினர்களை பிரிந்து தனியாக வசித்து வந்த இந்திராணி என்ற பெண்ணின் உறவினர்களை இலங்கையில் கண்டுபிடித்து குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதுபோல் பெருமாள்புரம் முகாமில் வசித்தும் வரும் சுகந்தி சுப்பிரமணியத்தின் உறவினர்களும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு இங்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட அகதிகள் ஒருவரை ஒருவரை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தனர். சந்திப்புக்கு ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கச் செயலர் உள்ளிட்டோருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.