9 சிறுமிகளின் கனவில் வந்த அம்மன் : தங்கப் புதையல் தேடி அலையும் மக்கள்!!

353


Amman

உத்தரபிரசேதத்தில் 9 சிறுமிகளின் கனவில் அம்மன் தோன்றி தங்கப் புதையல் இருப்பதாக கூறியதையடுத்து கிராம மக்கள் புதையல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.



காயிர்பூர் என்னும் கிராமம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த 9 வெவ்வேறு சிறுமிகள் தங்கள் கனவில் 2 வாரங்களுக்கு முன்பு தேவி (அம்மன்) தோன்றி, எனது சிலை ஒன்றும், தங்கப் புதையல் ஒன்றும் ஊருக்கு வெளியே உள்ள நிலத்திற்குள் புதைக்கப்பட்டு இருக்கிறது. அதை நீங்கள் எடுக்கவேண்டும் என்று கூறியதாக ஊர்பெரியவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காயிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை தினமும் அழைத்து புதையல் இருப்பதாக கூறிய இடத்தில் குழி தோண்ட தொடங்கினர். இன்று வரை 11 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு விட்டது. எனினும் இதுவரை அங்கு தங்கப்புதையல் எதுவும் கிடைக்கவில்லை.



இந்நிலையில் அம்மன் சிலையையும், தங்கப் புதையலையும் தொடர்ந்து தேடும் வேட்டை காயிர்பூரில் நடந்து வருவதைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்து கிராமவாசிகள் அதிசய சிறுமிகளையும், தங்கப் புதையலை தேடுவதையும் பார்ப்பதற்காக கிராமத்திற்கு படையெடுக்கத் தொடங்கினர்.



தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்ததால் அந்த பகுதியே தற்போது திருவிழா கோலம் பூண்டு உள்ளது. சிறுமிகளிடம் அவர்கள் ஆசி பெற்றுச் செல்கின்றனர். இதனால் காயிர்பூர் கிராமமே கடந்த 11 நாட்களாக பரபரப்பாக காணப்படுகிறது.


சம்பவ இடத்தில் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் போடப்படவில்லை என்பதால் சிறுமிகளை பார்க்க வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கிராமவாசிகள் திணறி வருகிறார்கள்.

சம்பவ இடத்தில் பொலிசார் அனுப்பி வைக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டு உள்ளனர் என்று ஜாக்னர் பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதே போல் 9 மாதங்களுக்கு முன்பு உத்தரபிரேதச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் தாந்தியா கேரா என்னும் கிராமத்தில் சோபன் சர்க்கார் என்ற சாமியார் டன் கணக்கில் தங்கப் புதையல் இருப்பதாக கூறி அந்த இடத்தை தோண்டிப் பார்க்க அலகாபாத் நீதிமன்றத்தில் மனுச் செய்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையினர் அந்த தோண்டிப்பார்த்தனர். ஆனால் அங்கு ஒரு குண்டுமணி தங்கம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.