வவுனியா ஓமந்தையில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதலை : கைது செய்யப்பட்டமைக்கு யாழ். ஊடக அமையம், பொ.ஐங்கரநேசன் கண்டனம்!!

331

Aingaranesan

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.

ஓமந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை (25) தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரை தடுத்து வைத்து பின் விடுவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் கண்டனச் செய்திக் குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது,

´கொழும்பில் நடைபெறவுள்ள ஊடகப் பயிற்சி நெறியொன்றில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, வாகனத்தை ஓமந்தை சோதனைச்சாவடியில் வழிமறித்த படையினர், வாகனத்துக்குள் கஞ்சா அடங்கிய சிகரெட் பெட்டி ஒன்றை வைத்துவிட்டு நாங்கள் கஞ்சா கடத்தியதாக நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர்´ என்று ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட போது, அவர்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாகப் பின்னர் விடுவிக்கப்பட்டாலும், சாரதி கஞ்சா வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களது இன்றைய பெரும் பலம் ஊடகவியலாளர்கள்தான். ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளுவதும் சேறு பூசுகின்ற நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுவருகின்றன.

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும் சமூகத்தில் அவர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது.

ஊடகங்கள்மீதும் ஊடகவியலாளர்கள்மீதும் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஜனநாயக ஊடகக் குரலை ஒடுக்க முற்படுவோர்களுக்கு எதிராக இன, மொழி பேதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் யாழ். ஊடக அமையமும் இச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

 

J1 J2