வவுனியாவில் கடும் வறட்சி : குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நிதியொதுக்கீடு!!

366

Varatchi

வவுனியா மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வரட்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கும் வகையில் 4 பிரதேச செயலகங்களுக்கும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுனரின் பிராந்திய இணைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பு செயலாளருமான ஐ.எஸ்.எம். முகைதீன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று (26.07) இடம்பெற்ற வரட்சி நிலை தொடர்பான விஷேட கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீனின் பணிப்புரைக்கமையவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

வவுனியாவில் உள்ள நான்கு பிரதேச செயலகங்களிலும் குடிநீர் பிரச்சனை உள்ளமையினால் உடனடியாக அவற்றை தீர்க்க வேண்டிய சூழல் உள்ளமை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ள கிராமங்களை இனம் கண்டு பிரதேச சபைகளின் வளங்களை பயன்படுத்தி குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிராமங்களில் அப்பகுதி மக்களால் சிறு குளங்கள், வாய்கால்கள். மற்றும் வீதிகளில் சிரமதானப்பணிகளை 6 நாட்கள் தொடக்கம் 12 நாட்களுக்கு மேற்கொண்டு அதற்கான 6000 ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.