வவுனியா இளைஞனுக்கு பலத்த பாதுகாப்புடன் சென்னையில் திருமணம்!!

407

Mrg

சென்னையில் தடுப்புக் காவலில் இருக்கும் இலங்கையை – வவுனியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞனுக்கு திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு சென்றதாகத் தெரிவித்து, வவுனியாவைச் சேர்ந்த கிருஷ்ணலிங்கம் (33) என்பவரை சென்னை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். அதன்பின்னர் அவரை செய்யாறு விசேட முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் திருமணம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரி கடந்த 8 ஆம் திகதி உள்ளூராட்சித் திணைக்களம் ஊடாக மாநில அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரின் திருமணத்துக்கு அனுமதியளிக்கப்பட்டதையடுத்து மணப்பெண்ணான அவரது உறவுப் பெண்ணான வசந்தமலர் மூன்று மாத சுற்றுலா விஸாவில் இந்தியாவிற்குச் சென்றார்.

இதையடுத்து நேற்று இவர்களின் திருமணம் பலத்த பாதுகாப்புடன் எளிய முறையில் நடைபெற்றது. பதிவாளர் அலுவலகத்துக்கு அண்மையாக இருந்த சிறிய முருகன் கோவிலில் மணப்பெண் வசந்தமலருக்குத் தாலி கட்டிய மணமகன் கிருஷ்ணலிங்கம் பின்னர் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு நெருக்கமான 5 உறவினர்கள் கலந்துகொண்டனர். திருமணத்தின் பின்னர் மணமகள் சென்னை பல்லாவாரத்தில் உள்ள அவரின் உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணலிங்கத்தை காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை அவர் சந்திக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.