வவுனியா ஊடகவியலாளர் ஒருவரின் தொலைபேசியில் இருந்து மோசடியான முறையில் சுதந்திர ஊடகவியலாளர் இயக்க முக்கியஸ்தருக்கு மிரட்டல்!!

302

media

வவுனியாவில் உள்ள பிரபல ஊடகவியலாளர் ஒருவருடைய கைத்தொலைபேசியில் இருந்து சுதந்திர ஊடகவியலாளர் இயக்கத்தின் முக்கியஸ்தராகிய சுனில் ஜயசேகரவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் சுனில் ஜயசேகர முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்.

இதனையடுத்து, இது பற்றி விசாரணை நடத்திய பொலிசார் அச்சுறத்தல் விடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட கைத்தொலைபேசி வவுனியாவில் உள்ள பிபிசி சந்தேசியவின் ஊடகவியலாளரான தினசேன ரத்துகமகேக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிந்து தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு 19 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர்.

இதுபற்றி கேட்டபோது, இந்தத் தகவலை ஊடகவியலாளர் ரத்துகமகே உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

என்ன காரணத்திற்காக என்னை விசாரணைக்கு அழைத்தார்கள் என்ற முழுமையான விபரத்தைப் பொலிசார் எனக்குத் தெரிவிக்கவில்லை. சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜயசேகரவை எனக்கு நன்கு தெரியும். அவர் ஒரு வகையில் என்னுடைய நண்பரும்கூட. என்னுடைய கைத்தொலைபேசி ஊடாகவே அவர் அச்சுறுத்தப்பட்டிருப்பதாகவே, தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்திருக்கின்றார் என்பதை வேறு வழிகளில் நான் விசாரித்து அறிந்து கொண்டேன்.

அதன் பின்னர் சுனில் ஜயசேகரவை நேரடியாகத் தொடர்பு கொண்டு விபரம் கேட்டேன். தனக்கு நன்கு பரிச்சயமான என்னுடைய கைத்தொலைபேசி இலக்கத்தில் இருந்தே அச்சுறுத்தல் வந்திருந்ததாகவும், இதன் காரணமாகவே தான் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் அவர் என்னிடம் கூறினார்.

ஆயினும் நான் சுனில் ஜயசேகரவை அச்சுறுத்தவில்லை என்றும், அவ்வாறு அச்சுறுத்த வேண்டிய தேவை எனக்கில்லை என்பதையும் அவருக்கு எடுத்துக் கூறினேன். அவரும் என்னுடைய உண்மையான நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டார்.

இதனையடுத்தே மோசடியான முறையில் என்னுடைய கைத்தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி சுனில் ஜயசேகரவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பது எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.

எனக்கும் சுனில் ஜயசேகரவுக்கும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. அவரை நான் அச்சுறுத்தவில்லை. அத்தகைய தேவை எங்களுக்குள் இருக்கவில்லை என்று தெரிந்திருந்தாலும், என்னுடைய தொலைபேசி இலக்கம் தெரியத்தக்க வகையில் எவ்வாறு சுனில் ஜயசேகரவுக்கு அச்சுறுத்தல் அழைப்பு சென்றது என்பதைக் கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. இது மிகவும் முக்கியமான அதேநேரம் மோசமான விடயமாகும்.

எனவே, நாங்கள் இருவரும் இணைந்து பொலிசாரிடம் உண்மை நிலைமையை விளக்கிக் கூறி இந்த மோசடி எப்படி நடந்தது, யாரால் நடத்தப்பட்டிருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காக பொலிசாரிடம் முறையிடவுள்ளோம் என்றார் வவுனியா ஊடகவியலாளர் தினசேன ரத்துகமகே.