உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால் எடை கூடுமா?

767

belly

பெண்களின் வயிற்று சதை குறைய ஜிம் போய் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதுமே உடலில் வலி வருவதைக் காரணமாகக் காட்டி, அதைத் தவிர்ப்பவர்களும் உண்டு. அந்த வலியானது தற்காலிகமானது; பயப்படத் தேவையில்லை.

ஜிம் போக ஆரம்பித்தால் காலம் முழுக்க தொடர வேண்டும். இடையில் நிறுத்திவிட்டால், மறுபடி எடை அதிகரிக்கும். இதன் பின்னணியிலும் ஒரு காரணம் உண்டு. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்கிற வரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பார்கள். தினசரி உடற்பயிற்சி செய்வார்கள். அதை நிறுத்தியதும் உணவுக்கட்டுப்பாடு தளர்ந்து, கண்டதையும் சாப்பிடுவார்கள்.

தினசரி உடற்பயிற்சி என்பதும் மாறிப் போகும். இப்படி இல்லாமல், ஜிம்முக்கு போவதை நிறுத்தினாலும் உணவுக்கட்டுப்பாட்டையும் தினசரி உடற்பயிற்சியையும் தவறாமல் செய்கிறவர்களுக்கு நிச்சயம் எடை ஏறாது.

நேரமே இல்லை என உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பவர்கள்தான் நம்மில் எக்கச்சக்கம். உடற்பயிற்சியை ஒரு தனி வேலையாக நினைக்காமல், தினசரி சாப்பாடு, தூக்கம் மாதிரி கடமையாக நினைப்பவர்கள் இப்படி நேரமின்மையைக் காரணம் காட்டித் தப்பிக்க மாட்டார்கள். 24 மணி நேரத்தில் அரை மணி நேரத்தை ஒதுக்கத் தெரியாதவர்கள், ஆரோக்கியத்தைக் கோட்டை விடுகிறார்கள் என்பதே உண்மை.

ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம். அதைத் தாண்டி செய்வதும் ஆபத்தானது. அது தசைகளைக் களைப்படையச் செய்து விடும். தினசரி செய்ய முடியாதவர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது உடற்பயிற்சியைத் தவறாமல் செய்ய வேண்டும். தினசரி நடைப்பயிற்சி போகிறேன் அதைத் தாண்டி வேறு உடற்பயிற்சி தேவையா என்கிற கேள்வியும் பலருக்கு உண்டு.

நடைப்பயிற்சி மட்டுமே உதவாது. தசைகளைத் தளர்ச்சியின்றி, இறுக்கமாக வைக்க வேறு சில பயிற்சிகளும் அவசியம். ஜிம் போகப் பிடிக்காதவர்கள் ஏரோபிக்ஸ், டான்ஸ், நீச்சல் என முயற்சி செய்யலாம். வேறு வழியே இல்லை ஜிம் போக வாய்ப்பே இல்லை என்பவர்கள், வீட்டிலேயே செய்யக் கூடிய பயிற்சிகளை உடற்பயிற்சி ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பின்பற்றலாம்.

வீட்டில் வைத்துச் செய்யக்கூடிய உடற்பயிற்சிக் கருவிகளையும் வாங்கிச் செய்யலாம். தம்பல்ஸ் எனப்படுவது தசைகளை இறுகச் செய்யவும், மணல் பைகள் கால்களுக்கும் கணுக்கால்களுக்கும் பலம் தரவும் உதவும். எந்தக் கருவியையும் முறையான ஆலோசனையின்றி, நீங்களாகவே வாங்கிச் செய்வது சரியானதல்ல.

வீட்டு வேலைகளைக் கூடியவரையில் நீங்களே செய்யப் பழகுவதைவிட மிகச் சிறந்த உடற்பயிற்சி வேறு இருக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.