தொடரைக் கைப்பற்றப் போவது யார் : பரபரப்பான போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதல்!!

263

SL

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரை சமப்படுத்தியுள்ள இலங்கை அணி இன்று நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க கடைசி போட்டியை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளவுள்ளது.

இந் நிலையில் இரண்டாவது போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இன்றைய போட்டியிலும் களம் இறக்கப்படுவர் என நம் பப்படுகின்றது.

ஏனெனில் முதலிரண்டு போட்டிகளுக்கு பெயரிடப்பட்டிருந்த வீரர்களையே மூன்றாவது போட்டிக்கான இலங்கை குழாமிலும் தெரிவாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

இந்த வீரர்கள் மீது நம்பிக்கைக் கொண்டுள்ள தெரிவுக் குழுவினர் குழாமில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்தது.

முதலிரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளிலும் இரண்டு அணிகளும் கணிசமான ஓட்டங்களைக் குவித்ததை அடுத்து தம்புள்ள மைதானத்திலும் கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்படலாம் என கிரிக்கட் விற்பன்னர்கள் கருதுகின்றனர்.

முதலாவது போட்டியில் பாகிஸ்தானும் இரண்டாவது போட்டியில் இலங்கையும் வெற்றிபெற்றிருந்தன. இதேவேளை, கடைசிப் போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றுவதற்கு துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் பிரகாசிப்பது அவசியம் என இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மத்யூஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிரேஷ்ட வீரர்களிடமிருந்து தனக்கு கிடைக்கும் அறிவுரைகளும் ஆலோசனைகளும் மிகப் பெரியளவில் உதவுதாகவும் அவை அணியின் அண்மைய வெற்றிகளுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி 2-1 என தொடரை கைப்பற்றும் என்பதால் இப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த நாட்டில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கும் இலங்கை அணியும், டெஸ்ட் போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் பாகிஸ்தான் அணியும் மோதும் இப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.