ஐ.நா மனித உரிமை ஆணையாளராக சையத் ஹுசைன் பதவியேற்பு!!

314

UN

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக ஜோர்தான் நாட்டின் இளைவரசர் சையத் அல் ஹுஸைன் இன்று தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு வருடங்களாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் பதவியிலிருந்த நவநீதம்பிள்ளை நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதன்போது கருத்துத் தெரிவித்த நவநீதம்பிள்ளை,

தற்போது இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணையை நடத்திவரும் ஐ.நா குழு, சிறப்பான முறையில் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நவநீதம்பிள்ளை, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதானியாக நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக தனது பணிகளை ஆரம்பித்த நவநீதம்பிள்ளை, 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி, மீண்டும் அப்பதவியில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது பதவியேற்புக் காலம் நேற்றுடன் பூர்த்தியான நிலையில், அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால், ஜோர்தான் நாட்டின் இளைவரசர் சையத் அல் ஹுஸைன், ஐ.நா மனித உரிமைகளின் புதிய ஆணையாளராக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.