வவுனியாவில் பணமோசடி செய்த இளைஞன் கைது!!

331

A6

வவுனியாவில் வயது முதிர்ந்த குடும்பம் ஒன்றை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியான முறையில் பணம் பெற்ற சந்தேகத்தில் ஒருவரை தாம் புதன்கிழமை கைது செய்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் வயது முதிர்ந்த குடும்பத்தின் வசித்து வந்துள்ளனர். இவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் உள்ளனர். இந்த நிலையில் வயது முதிர்ந்த தாய், தந்தை ஆகிய இருவரையும் ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் ஒருவர் அவர்களுடன் நெருக்கமாகப் பழகியுள்ளார்.

வங்கி நடவடிக்கைக்காக முதியவர்களுடன் வங்கிக்குச் சென்ற ஓட்டோ சாரதி, வங்கி பணவிபர நிலுவைகளை அறிந்து வேறு நபருடன் இணைந்து குறித்த முதியவர்களின் கணக்குக்கான வங்கி அட்டையைப் பெற்று அதிலிருந்து 150,000 பணத்தை மோசடியானமுறையில் பெற்றுள்ளார். இதேவேளை இவர்களது வங்கிக் கணக்கு புத்தகமும் காணாமல் போயுள்ளது.

இந்த நிலையில் வயது முதிர்ந்த தந்தை கடந்த ஜுலை மாதம் இறந்துவிட்டார். இதன்பின்னர் மூதாட்டி வங்கிக்கு சென்று தனது புத்தகம் தொலைந்து விட்டதாகவும் அதனைப் புதிதாக தருமாறும் கோரியுள்ளார். அதனடிப்படையில் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வங்கியால் புதிய புத்தகம் வழங்கப்பட்ட பேதே 150,000 ரூபா பணம் வங்கி அட்டை மூலம் பெறப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, தான் வங்கி அட்டை எதற்கும் விண்ணப்பிக்கவும் இல்லை. அதிலிருந்து பணம் பெறவும் இல்லை எனவும் தனது பணத்தை வங்கியில் இருந்து யாரோ எடுத்துவிட்டார்கள் எனவும் வவுனியா பொலிஸில் அந்த மூதாட்டி முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் இச் சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞரை கைது செய்தனர் என்றும் ஓட்டோ சாரதியை தேடிவருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.