வவுனியாவில் தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்தும் மகாகவி பாரதியின் 93வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கு!!

772


மகாகவி பாரதியின் 93வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கை நடத்தும் இவ்வேளையானது விடுதலையை வேண்டி நிற்கும் நாட்டிற்கு பாரதியின் கருத்துக்கள் மிகவும் பொருத்தமானவை.

விடுதலை என்பது அரசியல் விடுதலை மட்டுமல்ல, அதனோடு சுரண்டலில் இருந்து விடுதலை, சாதி, மத, இன ஒடுக்கு முறைகளிலிருந்து விடுதலை, பெண் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை என்பனவற்றையும் இணைக்கும் போது தான் நாடு பூரண விடுதலை அடையும் என்பதை பாரதி வலியுறுத்தினார்.



இவ்வாறு மகாகவி பாரதியின் 93 வது நினைவு தினத்தையொட்டி தேசிய கலை இலக்கியப் பேரவையின் வவுனியா மாவட்டச் செயலாளாளர் திரு.சு.டொன்பொஸ்கோ விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளாதாவது..

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் பாரத நாடு ஆக்கிரமிக்கப்பட்டது. அதன் தேசிய பொருளாதாரம் வீழ்த்தப்பட்டது. அந்நிய பொருட்களின் சந்தையாக்கப்பட்டது. இந்தியர்களது உழைப்பும் மூலப்பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.



நாட்டு மக்கள் வறுமையில் வாடினார். அறியாமையிலும் மூட நம்பிக்கையாலும் பழமை வாதச் சிந்தனையாலும் சாதி வேறுபாடுகளையும், பெண் அடிமைத்தனத்தையும் பேணி வந்தனர். இவை சுதந்திர போராட்டத்திற்கு முட்டுக்கட்டையாய் நின்றன. இவைகற்கு எதிராக தன் எழுத்துக்களால் கவிதைகளால், கட்டுரைகளால், சிறு கதைகளால், நாவல்களால் அறிவூட்டி எழுச்சியூட்டினான்.



இன்று எமது நாடும் நவகொலனித்துவ திறந்த பொருளாதாரத்தினால் உள்ளூர், தேசிய பொருளாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது. இன, மத பூசல்கள் அதிகரிக்கின்றன. சாதி பேதம், பெண் அடிமைத்தனம், மூட நம்பிக்கைக்கள் நவீன வடிவங்களில் தலை தூக்குகின்றன.


சுரண்டல், உற்பத்தி குறைவு, தொழில் வாய்ப்பின்மையால் மக்கள் நாளாந்தம் கடனாளிகள் ஆகின்றார்கள், வறுமைக்குள் தள்ளப்படுகின்றார்கள்.

இந்நிலையில் பாரதியின் விடுதலை சிந்தனைகள் மக்களின் விடுதலைக்கு வாழிகாட்டும் எனவே அவரது 93வது ஆண்டை நினைவுகூறும் முகமாக தேசிய கலை இலக்கியப் பேரவையினராகிய நாங்கள் வவுனியாவில் அனைத்துப் பல்கலைக்கழக அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் 21.09.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்விற்கு தேசிய கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினர் திரு.சு.செல்வகுமார் தலைமைதாங்கி நடாத்துகின்றார். அத்துடன் ‘‘பாரதி காட்டும் விடுதலை’’ எனும் தலைப்பில் திரு.சு.டொன்பொஸ்கோ – (தேசிய கலை இலக்கியப் பேரவை வவுனியா மாவட்டச் செயலாளர்) அவர்கள் கருத்துரை ஒன்றை வழங்குவார்.

‘‘பாரதியின் பாட்டுத்திறம்’’ எனும் தலைப்பில் திரு.ந.பார்த்தீபன் – (சிரேஸ்ட விரிவுரையாளார்- தேசிய கல்வியற் கல்லூரி) அவர்களும் கருத்துரைகளை வழங்குவார்கள்.

செம்மலர் கலைக்குழுவினால் கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப்படும். எனவே தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், முற்போக்கு இலக்கிய சக்திகள் என அனைவரையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வவுனியா மாவட்ட தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அன்புடன் வேண்டி நிற்கின்றனர்.

Kalai ilakkiyaperavai - 01 Kalai ilakkiyaperavai 2