வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாததால் வழக்குகள் தாமதம்!!

302


vavunia_high_court

வவுனியா மேல் நீதிமன்றத்தில் கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றதன் பின்னர், அந்த இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்படாத காரணத்தினால் கடந்த ஒன்றரை மாதங்களாக முக்கியமான வழக்குகள் விசாரணை செய்யப்படாமல் பிற்போடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான வழக்குகளும் குற்றவியல் வழக்குகளுமே மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுகின்றன.

இவற்றில் குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்குகள் பெரும் எண்ணிக்கையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



நீதிபதி இல்லாத காரணத்தினால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்ச்சியாகப் பின்போடப்பட்டு வருவதாகவும் தாங்கள் நீதிமன்ற விசாரணைக்காக அலைய நேர்ந்துள்ளதாக சந்தேக நபர்களின் உறவினர்கள் கூறுகின்றார்கள்.



புதிய நீதிபதி ஒருவர் நியமிக்கப்படாத காரணத்தினால் வழக்கு விசாரணைகள் மட்டுமல்லாமல், மேல் நீதிமன்றத்தின் நிர்வாக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி கந்தசாமி தயாபரன், இது குறித்து பிரதம நீதியரசரின் கவனத்திற்கும் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.