யாழ்தேவி புகையிரதம் மூலம் இரு நாட்களில் 9 லட்சம் ரூபா வருமானம்!!

1025

Yarl

யாழ்தேவி ரயில் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களில் 9 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தன் தெரிவித்தார்.

24 வருடங்களுக்கு பின்னர் கடந்த 13ம் திகதி பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான யாழ் தேவி புகையிரத சேவையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.

அதன் பின்னர் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத சேவைகளில், 3 லட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், கடந்த 15 ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவையில், 6 லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபா வருமானமும் கிடைத்துள்ளதாக நா.தபானந்தன் கூறினார்.

அந்தவகையில், இரு தினங்களும் 9 லட்சத்து 80 ஆயிரத்து 525 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், அதிவிசேட இருக்கைகளுக்கான பதிவுகள் முன் கூட்டியே மேற்கொள்ளப்படுவதால் அதிவிசேட இருக்கைகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் பிரதான புகையிரத அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு 52.60 சதம் பெறுமதியான பயணச் சீட்டுகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.