ஜனாதிபதி தலைமையில் வடக்கின் அதிவேகப் பாதைக்கு அடிக்கல் நடும் வைபவம்!!

299

Highways

யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதைக்கு அடிக்கல் நடும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ளது.

வடக்கிற்கான அதிவேகப் பாதையொன்றை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பை அண்மித்த மஹர பிரதேசத்தல் இருந்து இந்தப் பாதை ஆரம்பமாகவுள்ளது. அங்கிருந்து ரம்புக்கனை வரை செல்லும் பாதை, ரம்புக்கனையில் இருந்து கண்டி அதிவேகப் பாதையாகவும், யாழ். அதிவேகப் பாதையாகவும் இரண்டாகப் பிரியவுள்ளது.

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களில் வடக்கிற்கான அதிவேகப் பாதை செயற்திட்டத்திற்கே ஆகக் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகளுக்காக 350 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

குறித்த அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் இம்மாதம் 19ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் பிற்போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி வடக்கு அதிவேகப் பாதையின் நிர்மாணப்பணிகளுக்கான அடிக்கல் நடப்படவுள்ளது. குருநாகலை கலகெதர பிரதேசத்தில் ஜனாதிபதி இதனை நட்டு வைப்பார் என்று தெரிய வந்துள்ளது.

கண்டி அதிவேகப் பாதைக்கான அடிக்கல் நவம்பர் 15ம் திகதி ரம்புக்கணையில் நடப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.