வவுனியாவில் பாழடைந்த நிலையிலுள்ள பப்பட தொழிற்சாலையை மீள இயங்கவைக்குமாறு கோரிக்கை!!

307

Pap

வவுனியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்ட பப்படம் தொழிற்சாலை இயங்காது பாழடைந்து செல்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த குறித்த பப்படம் தொழிற்சாலையை, இலங்கை அரசும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பும் இணைந்து பல கோடி ரூபா பெறுமதியில் உருவாக்கின.

ஆனால் இத் தொழிற்சாலை திறக்கப்பட்டு ஒரு வருட காலப்பகுதியிலேயே மூடப்பட்டுவிட்டது. இதனால் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான இளைஞர் யுவதிகள் தமது தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர்.

செட்டிகுளம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு சொந்தமான இத் தொழிற்சாலையிலிருந்தே வவுனியா உட்பட வட பகுதிகளுக்கு பப்படம் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் இத் தொழிற்சாலை மூடப்பட்டமையானது இப் பகுதிக்கு ஏற்பட்ட பாரிய வருமான இழப்பாகவும் கருதப்படுகிறது.

எனவே, இத் தொழிற்சாலையை மீள இயங்கவைத்து இப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கு, செட்டிகுளம் பலநோக்கு கூட்டுறவுச்சங்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.