கனடா, அமெரிக்காவில் பாரிய பனிப்புயல் : பலர் உயிரிழப்பு!!

482

அமெரிக்காவில் நியூயோர்க், நியு ஹம்ப்சயர் மற்றும் மிச்சிக்கன் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு காரணத்தால் குறைந்தது 6 பேர்கள் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியுயோர்க்கின் மேற்கு பாகத்தில் நேற்று செவ்வாய்கிழமை 120-சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பெய்துள்ளது. இன்று அமெரிக்க நேரம் இரவுக்குள் 180-சென்ரி மீற்றர்கள் வரை எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகார பூர்வமான குளிர்காலம் டிசம்பர் 21ம் திகதி ஆரம்பமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னராக பனிபுயல் ஆரம்பித்து பிராந்தியம் பூராகவும் ஒரு ஆழ்ந்த உறைபனி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் ரொறொன்ரோவிலும் புதன்கிழமை காலை காற்றுடன் கூடிய வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் 17 ஆக காணப்படுவதுடன் 5 சென்ரிமீற்றர்கள் வரையிலான பனி பொழிவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நியூயோர்க்கின் வடபகுதியில் ஒரு வருடத்திற்கான மதிப்புள்ள பனி 3 நாட்களில் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

விசேடமாக பவ்வலோ மோசமான பனியால் தாக்கப்பட்டுள்ளது. மணித்ததியாலத்திற்கு 10-12 சென்ரி மீற்றர்கள் அளவிலான பனி பெய்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனி தீவிரமாக காணப்படுவதால் நியூயோர்க்கின் பிரதான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மூர்க்கத்தனமான பனிப் புயலினால் 150ற்கும் மேற்பட்ட வாகனங்கள் பனிக்குள் புதையுண்டுள்ளன.

கனடா நயாகரா பல்கலைக்கழக பெண்கள் கூடைப்பந்தாட்ட அணியினர் பவ்வலோவில் அகப்பட்டு 24 மணித்தியாலங்கள் பேரூந்து ஒன்றிற்குள் இருந்துள்ளனர். பிற்ஸ்பேக்கில் விளையாட்டில் கலந்து விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் பனிப்புயலில் அகப்பட்டுள்ளனர்.

பேரூந்தில் இருந்து காப்பாற்றப்பட்டு புதன்கிழமை காலை பல்கலைக் கழகத்தை வந்தடைந்தனர்.

கனடா- ஒன்ராறியோவின் தென்பகுதி நகரங்கள் ரொறொன்ரோ உட்பட்ட பெரும்பாலானவற்றிற்கு கனடா சுற்றச்சூழல் பிரிவு விசேட காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 5 சென்ரிமீற்றர்கள் வரையிலான பனி பெய்யலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.

ஹமில்ரன், ஒட்டாவா, கோன்வால், ஹால்ரன், கிங்ஸ்ரன், லண்டன், நயாகரா, ஒக்ஸ்வோட்-பிரான்ட், பீற்றபொறோ, சானியா, வாட்டலூ, வின்சர் மற்றும் யோர்க் பிரதேசம் போன்றன இதில் அடங்குகின்றன.

புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்த பனி பொழிவு ரொறொன்ரோ பெரும்பாக முழவதிலும் அவசர நேர போக்குவரத்தை மந்தகதிக்கு தள்ளியுள்ளது.

நியு யோர்க்கின் பல மாநிலங்கள் 5-அடிகளிற்கும் மேலான பனியினால் போர்த்தப்பட்டுள்ளது. பவ்வலோ நகரம் உட்பட்ட எறிக் கவுன்ரி பகுதிகளில் பெருந்தொகை பனி காரணமாக அவசர காலநிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

snow_01 snow_02 snow_06 snow_08 snow_09