வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

384

va

வவுனியா செட்டிகுளம் தள வைத்தியசாலையில் வைத்தியர் காவலாளியை தாக்கியதை கண்டித்து வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

செட்டிகுளம் தள வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியரான கஜான் தம்பிக்க என்பவர் நேற்று இரவு கடமையில் இருந்த காவலாளியை அழைத்து நோயாளர் காவு வண்டியை தள்ளுமாறு பணித்திருந்ததாகவும் அதேவேளை மற்றுமொரு காவலாளியையும் அழைக்குமாறு வைத்தியர் தெரிவித்தபோது காவலாளி அவர் வாயில் கடமையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கோபமுற்ற வைத்தியர் காவலாளி வைத்திருந்த மின் விளக்கை பறித்து காவலாளியின் தலையில் தாக்கியதாகவும் இதன் காரணமாக காவலாளிக்கு காயமேற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததுடன் சிற்றூழியர்களின் சீருடைகளையும் நீர்த்தொட்டியொன்றில் போட்டுள்ளதால் தமக்கு கடமையை செய்ய சீருடை இல்லாதுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பந்தப்பட்ட வைத்தியர் கடந்த தடவை தாதியர் ஒருவரை தாக்கியதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தயிர் மதுபோதையில் உள்ளமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் வைத்தியசாலையின் தாதியர்கள், மருத்துவ மாதுக்கள், சிற்றூழியர்கள் வைத்தியசாலையின் முன்னால் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந் நிலையில் வைத்தியரை இடமாற்றம் செய்யவெண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்ததுடன் அதிகாரிகளுக்கும் இச்சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.