யாழ்.நாவாந்துறை பகுதியில் பதற்றம் : படையினர் குவிப்பு!!

349

jaffna

யாழ்.நாவாந்துறை பகுதியில் உதைபந்தாட்டப் போட்டியினால் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் மற்றும் வன்முறை காரணமாக பல வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் காயமடைந்தும், பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்பட்டும் உள்ள நிலையில் அப்பகுதியில் பொலிஸார் மற்றம் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள சென் நீக்ளஸ் மற்றும் சென் மேரிஸ் ஆகிய விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் காலத்திலிருந்தே முறுகல் நிலை இருந்து வருகின்றது

இந்நிலையில் மென்பான விற்பனை நிறுவனம் ஒன்று நேற்றைய தினம் யாழ்.மாவட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான, சுற்றுப்போட்டியை நடத்திய நிலையில் சென் மேரிஸ் அணி வெற்றி பெற்றது.

அவர்கள் தமது வெற்றியை கொண்டாடிய நிலையிலேயே குறித்த மோதல் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் யார் மோதலை தொடக்கினர் என்பதற்கு இரு தரப்பும் ஒருவரயொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினமும் கடற்றொழிலுக்குச் சென்ற சென் நிக்ளஸ் பகுதி கடற்றொழிலாளர்கள் சென் மேரிஸ் பகுதி கடற்றொழிலாளர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் இன்று காலை தொடக்கம் பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அப்பகுதியில் இன்றைய தினமும் அமைதியான சூழல் உருவாகாத நிலையில் பதற்றமான சூழல் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற வன்முறையில் பல வீடுகள் உடைத்து நொருக்கப்பட்டுள்ளதுடன், கடற்கரை வீதி முழுவதும் குளிர்பான போத்தல்கள் உடைக்கப்பட்டு. கண்ணாடி போத்தல் ஓடுகளாக காணப்படுகின்றது.

இந்நிலையில் இன்றிரவும் மோதல் உருவாகலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மோதலை தடுக்கும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை தாம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.