இங்கிலாந்திற்கு எதிரான தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை அணி!!

262

SL

இங்கிலாந்து அணிக்கெதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு டில்சான், பெரேரா ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 18.5 ஓவரில் 100 ஓட்டங்களை கடந்தது. இலங்கை அணி 22.2 ஓவரில் 120 ஓட்டங்களை எடுத்திருக்கும்போது பெரேரா 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து சங்கக்கார களம் இறங்கினார். அவர் 2 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

3 ஆவது விக்கெட்டுக்கு டில்சானுடன் ஜெயவர்தன ஜோடி சேரந்தார். இந்த ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்கு 76 ஓட்டங்களை குவித்தது. 88 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் டில்சான் ஆட்டமிழந்தார்.

ஜெயவர்தன தன் பங்குக்கு 58 பந்தில் 55 ஓட்டங்களை எடுத்தார். அணித் தலைவர் மெத்தியூஸ் 24 பந்தில் 33 ஓட்டங்களையும் மெண்டிஸ் 14 பந்தில் 30 ஓட்டங்களையும் குவிக்க இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்களை குவித்தது.

318 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களை எடுத்தது 25 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மொயின் அலி 119 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக திஸர பெரேரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் டில்சான் தெரிவுசெய்யப்பட்டார்.

7 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.