தலையில் பந்து தாக்கிய அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

321

hu

தலையில் பந்து பட்டதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த, அவுஸ்திரேலிய அணியின் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் முதல் தர போட்டியான ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடரில் தெற்கு அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் அணிகள் கடந்த 24ம் திகதி சிட்னியில் மோதின.

இப்போட்டியில் தெற்கு அவுஸ்திரேலிய அணி வீரர் பிலிப் ஹியுஸ் 63 ஓட்டங்களைக் கடந்த நிலையில், நியூ சவுத் வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் சியான் அபாட் வீசிய பவுன்சரை, ‘புல்’ ஷொட் அடிக்க முயன்றார்.

அப்போது, பந்து அவரது இடது காதின் மேலே தலை பகுதியில் பலமாக தாக்கியது. ஹெல்மட் பாதுகாப்பை கடந்து தாக்கியதால் ஹியுசின் தலையில் இரத்தம் கொட்டியது. சில வினாடிகளில் அப்படியே சுருண்டு கீழே விழுந்தார்.

இதைக்கண்ட வார்னர் உள்ளிட்ட சக வீரர்கள், மைதான ஊழியர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். மருத்துவ வசதிகள் அடங்கிய ‘ஹெலிகப்டர்’, ‘அம்புலன்ஸ்கள்’ வரவழைக்கப்பட்டன.

வைத்தியர்கள் ஜோன் ஆர்ச்சர்ட், ஹியுசுக்கு மூச்சை கொண்டு வர முயன்றார். இதற்கு பலன் கிடைக்க, ‘அம்புலன்ஸ்’ மூலம் உயர் சிகிச்சைக்காக, செயின்ட் வின்சன்ட் மருத்துவமனைக்கு ஹியுஸ் கொண்டு செல்லப்பட்டார்.

‘ஸ்கேன்’ செய்யப்பட்டதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.

மூளைக்கு அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க, ஊசிகள் செலுத்தி மருந்துகள் உதவியுடன் கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இவர் மரணமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலர் அவரின் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் அனுதாபங்களை தெரிவித்தும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

26 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு 20 ஓவர் போட்டியில் விளையாடியுள்ள 25 வயதான ஹியூக்ஸக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி 26 ஆவது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Phillip-Hughes