அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸூக்கு மரியாதை செலுத்தத் தயாராகும் இலங்கை வீரர்கள்!!

301

heq

தலையில் பந்து பட்டதால் உயிரிழந்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸூக்கு இலங்கை வீரர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இதன்படி நாளை சனிக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை வீரர்கள் பிலிப் ஹியூக்ஸூக்கு மரியாதை செலுத்தும் முகமாக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

மேலும் துக்கத்தை கடைப்பிடிக்கும் முகமாக கறுப்புப் பட்டி அணியும் கோரிக்கை நிலுவையில் உள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

போட்டி நடுவரிடம் இருந்து முறையான அனுமதிக்காக காத்திருப்பதாக, இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிலிப் ஹியூக்ஸின் அகால மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தாருடன் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்வதாக இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் நிஷாந்த ரணத்துங்க குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் போட்டி ஒன்றின் போது பவுன்சர் பந்து தலையில் பயங்கரமாக தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற, 25 வயதான அவுஸ்திரேலியாவின் இளம் வீரர் பிலிப் ஹியூக்ஸ் நேற்று உயிரிழந்தார்.

இதனால் வீரர்கள், இரசிகர்கள், நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வைத்தியசாலைக்கு வந்திருந்த டேவிட் வார்னர், மாத்யூ வேட், பிராட் ஹேடின் உள்ளிட்ட வீரர்கள் துக்கம் தாங்காமல் அழுதனர்.

வைத்தியசாலைக்கு முன்பு திரண்டிருந்த இரசிகர்களும் கண்ணீர் விட்டனர். பிலிப் ஹியூக்ஸ் உடலுக்கு வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், இரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலிய தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. சிட்னி மைதானத்தில் வெளியே பிலிப் ஹியூக்ஸ் படம் வைக்கப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.