சிறுவனின் பொய் சாட்சியத்தால் இளமையை தொலைத்த 3 நபர்கள் : ஓர் பரிதாபச் சம்பவம்!!

252

jail

அமெரிக்காவில் சிறுவன் கூறிய பொய் சாட்சியத்தால் 40 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்கள் தற்போது நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் 1975ம் ஆண்டில் ஒரு நாள், ஹரால்ட் பிராங்க்ஸ் என்பவரை 2 பேர் அமிலத்தை வீசி தாக்கினர். அவர்களில் ஒருவர் துப்பாக்கியாலும் சுட்டார். இந்தத் தாக்குதல் முடிந்த பிறகு அந்த 2 பேரையும் மூன்றாமவர் காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பவைத்தார்.

அதற்குப் பிறகு ஹரால்ட் பிராங்க்ஸ் இறந்துவிட்டார். பொலிசார் இந்தக் கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கினர்.

ஹரால்டை தாக்கியதாகவும் கொன்றதாகவும் தொடரப்பட்ட இந்த வழக்கில், அரசுத்தரப்பின் முக்கிய சாட்சியாக 12 வயதுச் சிறுவன் எட்டி வெர்னான் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

சம்பவத்தை நேரில் பார்த்த அவனுடைய சாட்சியத்தின் பேரில் ரோனி பிரிட்ஜ்மேன் (17) அவனுடைய அண்ணன் வைலி பிரிட்ஜ்மேன் (20), ரிக்கி ஜாக்சன் (19) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

3 பேருக்கும் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டுக்குப் பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 27 வருட சிறைவாசத்துக்குப் பிறகு 2003ல் ரோனி பிரிட்ஜ்மேன் பிணையில் விடுதலையானார்.

இந்தச் சம்பவத்தை 2011ல் சீன் என்ற அமெரிக்கப் பத்திரிகையின் நிருபர் கைல் ஸ்வென்சன் மீண்டும் புலனாய்வு செய்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் எட்டி வெர்னான் தன்னுடைய சாட்சியத்தைத் திருத்த விரும்புவதாக அறிவித்தார்.

சம்பவம் நடந்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அந்தத் தாக்குதலைப் பார்க்கவே இல்லை என்றும், அப்போது பஸ்ஸில் போய்க்கொண்டிருந்ததாகவும் பொலிசாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்ததால் சாட்சி சொல்ல முன்வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த மூவரின் பெயரை பொலிசாரிடம் கூறியது தான்தான் என்றும், பதிலுக்கு வழக்கு விவரங்களைப் பொலிசார் தன்னிடம் கூறி, நீதிமன்றத்தில் எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இப்போதுதான் நான் சரியான செயலைச் செய்திருக்கிறேன், பொலிஸ் அதிகாரிகளை மீண்டும் அணுகி எல்லா உண்மைகளையும் கூறினேன் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 40 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டனர்.

எங்களுடைய இளமை, வாழ்க்கை, மகிழ்ச்சி எல்லாமே கொள்ளைபோய்விட்டது என்று சோகம் ததும்ப இவர்கள் கதறி அழுதுள்ளனர்.