யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அடிதடி : விவசாய அமைச்சருக்கு மூக்குடைப்பு!!

329

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட மோதலால் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் காயமடைந்துள்ளார்.

யாழ் கச்சேரியில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஈபிடிபி மற்றும் ததேகூ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஐங்கரநேசனுக்கு மூக்கிலும் மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரனுக்கு நெற்றியிலும் காயம் ஏற்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

குழப்பம் காரணமாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தற்சமயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

யாழ், மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மற்றும் இணைத் தலைவர் முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று காலை யாழ். கச்சேரியில் ஆரம்பமானது. இதில் யாழ். அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிவி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில் மத்திய அரசாங்கத்தை விமர்சித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில் வட மாகாண சபையை விமர்சித்தும் பேசியுள்ளனர்.

இதன்போது குறுக்கிட்ட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் மாகாண சபையை பற்றி பேசுவதை நிறுத்துமாறும் யாழ், மாவட்ட அபிவிருத்தி பற்றி மாத்திரம் பேசுமாறும் கூறியுள்ளனர்.

பின்னர் அபிவிருத்தி பற்றி மாத்திரம் பேசுவது என தீர்மானிக்கப்பட்டு கூட்டம் தொடர்ந்த நிலையில் வட மாகாண எதிர்கட்சித் தலைவர் தவராசா வட மாகாண சபை வரவு செலவுத் திட்டம் தொடர்பில் உரையாற்றியுள்ளார். இதன்போது சிவாஜிலிங்கம், சிவிகே.சிவஞானம், சிறிதரன் உள்ளிட்ட பலர் குறுக்கிட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது மோதல் வரை சென்றுள்ளது. இந்த மோதலில் வட மாகாண விவசாய அமைச்சர் பொன்.ஐங்கரநேசனுக்கு மூக்குடைப்பட்டு இரத்தம் சொட்டியதோடு உறுப்பினர் சர்வேஸ்வரனுக்கு நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டது.

இந்த மோதல் நிலையை அடுத்து கூட்டத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநடப்பு செய்த நிலையில் கச்சேரியில் இருந்த ஈபிடிபி மற்றும் அரச அதிகாரிகள் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

1 2 3