தாய் மண்ணில் இறுதிக் களம்காணும் சாதனை நாயகர்கள் : உணர்வுபூர்வமாக அமையப்போகும் இன்றைய போட்டி!!

299

kumar-sangakkara-mahela-jayawardene--dilshan

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள ஏழாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியானது இலங்கையின் முன்னாள் தலைவர்களும் சாதனை நடசத்திரங்களுமான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ன டில்சான் ஆகியோர் தமது சொந்த மண்ணில் பங்கேற்கும் இறுதி சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியாகும்.

இரு அணிகளுக்குமிடையிலான ஏழு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 4-2 என கைப்பற்றியுள்ள நிலையில் இன்றை தினம் களமிறங்குகின்றது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் புதிய அத்தியாத்தை ஏற்படுத்திய சர்வதேச அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்த நட்சத்திர வீரர்களான மஹேல, சங்காவுக்கும் வெற்றியுடன் பிரியாவிடையளிக்கப்படுமா என்ற எதிர்பாப்பும் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் இவ்விருவருக்கும் போட்டியின் முடிவில் உணர்வுபூர்வ பிரியாவிடையை ஆயிரக்கணக்கான இரசிகர்கள் வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

இன்று பிற்பகல் 2.30மணிக்கு ஆரம்பமாகும் இப் போட்டியில் பங்கேற்கும் இறுதிப் பதினொருவர் கொண்ட இலங்கைக் குழாம் இறுதிநேரத்தில் தெரிவு செய்யப்படவுள்ளதோடு இங்கிலாந்து தரப்பில் ஆறாவதுபோட்டியில் பங்கேற்ற அதேகுழாமே பங்குபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் பிரேமதாச விளையாட்டரங்கில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் மஹேல கலந்துகொண்டிருந்தார். அவரிடத்தில் செய்தியாளர்கள் வினவிய தொடடுத்த வினாக்களும் பதில்களும் வருமாறு..

கேள்வி:- உங்களது இந்தப் பிரியாவிடைப் போட்டி உங்களை உணர்ச்சிவசப்படச் செய்யுமா?

பதில்:- அப்படி ஒரு நிலை ஏற்படும் என நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் நான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டிதான் என்னை அதிகளவில் உணர்ச்சிவசப்படச் செய்தது. ஒருவேளை போட்டியின் பின்னர் நான் உணர்ச்சிவசப்படக்கூடும். ஏனெனில் இரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு என்னை அந்த நிலைக்குத் தள்ளிவிடக்கூடும் என பதிலளித்தார்.

ஆரம்பப் போட்டியும் பிரயாவிடைப் போட்டியும் ஒரே மைதானத்தில் இடம்பெறுவதை நினைவுபடுத்தியபோது, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் வாழ்க்கையை ஆரம்பித்த அதே மைதானத்தில் பிரியாவிடை பெறுவது என்பது அதிர்ஷ்டம்.

நான் மிகுந்த அர்ப்பணிப்புடனும் மனநிறைவுடனும் சந்தோஷத்துடனும் விளையாடி வந்தேன். நான் இந்தளவு முன்னேற்றத்தை அடைவேன் என நான் எண்ணியதில்லை. அர்ப்பணிப்புத்தன்மையையும் விடாமுயற்சியையும் நினைவில் நிறுத்தியவாறு எனது திறமையை வெளிப்படுத்திவந்தேன்

கேள்வி:- இன்றைய போட்டியிலும் உலகக் கிண்ணப் போட்டிகளிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடுவீர்களா?

பதில்:- இங்கிலாந்துக்கு எதிரான ஓரிரு போட்டிகளில் என்னை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடுமாறு கிரிக்கட் அணி முகாமைத்துவம் கேட்டுக்கொண்டது. உலகக் கிண்ணப் போட்டிவரை இது தொடருமா என்று நான் கருதவில்லை.

அதற்கு முன்னர் நியுஸிலாந்துக்கு எதிரான தொடர் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். மேலும் எமது குழாமில் இன்னுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இருக்கின்றார். எனவே இன்றைய போட்டிக்கு முன்னர் தெரிவாளர்களும் அணி முகாமைத்துவத்தினரும் உரிய வீரர்களைத் தெரிவு செய்வர் என மஹேல குறிப்பிட்டார்.

குமார் சங்கக்கார தனது சொந்த மைதானத்தில் சதம் குவித்துவிட்டு விடைபெற்றதுபோல் நீங்களும் சதம் குவித்து விடைபெற முயற்சிப்பீர்களா என வினவப்பட்டபோது, ‘அப்படி ஒன்றும் இல்லை. என்னாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி அணியை வெற்றிபெறச் செய்வதே எனது நோக்கம் என்றார்.