ஜெயலலிதாவுக்கு பிணை நீடிப்பு!!

321

Jeya

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு வழங்கப்பட்ட பிணை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

கர்நாடக உயர்நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததை அடுத்து, இந்திய உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் பிணை வழங்கியது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை டிசம்பர் 18ம் திகதிக்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு ரசீது பெறப்பட்டது. இதனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு மேலும் இரண்டு மாதங்கள் பிணையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.