ஓய்வு பெறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை : டில்சான்!!

627

Dilshan

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கை அணியின் சகலத்துறை வீரர் திலகரட்ன டில்சான் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 7ஆவதும் இறுதியுமான போட்டி நேற்று-முன்தினம் கொழும் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது தொடரை 5-2 என கைப்பற்றியது. இந்தப் போட்டியில் 101 ஓட்டங்களை பெற்ற டில்சான் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த டில்சான் தனது ஓய்வு குறித்து கருத்து கருத்து தெரிவிக்கையில்.

இந்த தொடரில் நூறு ஓட்டங்களை பெற்றது சிறப்பானதொன்றாகும். இந்த தொடரில் சகலத்துறையில் சிறப்பாக செயற்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இளைய வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். இவர்களுடன் சேர்ந்து உலகக் கிண்ணத்தை தொடரை வெல்வது தொடர்பான சிந்தனைகளே உள்ளன.

மேலும் ஒரு நாள் அரங்கில் நான் ஓய்வு பெறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. எனது உடல் நிலை நன்றாகவே உள்ளது. எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடருக்கு பின்னர் எதுவரை என்னால் விளையாட முடியுமோ அதுவரை விளையாடுவேன். அதற்கு பின்னரே ஒரு நாள் அரங்கில் ஓய்வு பெறுவது குறித்த தீர்மானத்தை எடுப்பேன் என்றார்.

ஒரு நாள் அரங்கில் 300 போட்டிகளில் விளையாடியுள்ள டில்சான் துடுப்பாட்டத்தில் 18 சதங்கள் 41 அரைச் சதங்கள் அடங்கலாக 9004 ஓட்டங்களை கடந்துள்ளார். 2012 பெப்ரவரி 28 ஆம் திகதி அவுஸ்திரேலியா ஹோபர்ட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களை பெற்றதே அவர் ஒருநாள் தொடரில் பெற்ற அதிகூடிய ஓட்ட பிரதியாகும்.

மேலும் பந்து வீச்சில் 300 போட்டிகளில் பங்குபற்றி 93 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதோடு களத்தடுப்பில் 109 பிடியெடுப்புகளை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.